பாலியல் புகார்: தடகளப் பயிற்சியாளர் நாகராஜனுக்கு 11ஆம் தேதி வரை சிறை

பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தடகளப் பயிற்சியாளர் நாகராஜனை வரும் 11ஆம் தேதி வரை சிறையில் அடைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு பயிற்சிக்கு சென்றபோது தடகள பயிற்சியாளர் நாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் வீராங்கனை புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நாகராஜன் மீது பூக்கடை மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தூக்க மாத்திரைகளை உட்கொண்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர். நேற்றிரவு போக்சோ நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியபோது, முறையான ஆவணங்கள் இல்லாததால் சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.

முறையான ஆவணங்கள் இன்றி இரவு நேரத்தில் நீதிபதியை தொந்தரவு செய்ததாக காவல் ஆணையர் ஜெயலட்சுமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க நீதிபதி பரிந்துரைத்தார். இந்நிலையில், இன்று காலை முறையான ஆவணங்களுடன் நாகராஜனை ஆஜர்படுத்தியபோது, அவரை வரும் 11ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Facebook Comments Box
Author: sivapriya