சிபிஎஸ்இ +2 தேர்வு குறித்து 2 நாளில் முடிவெடுக்கப்படும் – மத்திய அரசு

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக 2 நாளில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வுகள் முதலில் ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு பிறகு மே மாதம் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் கொரோனா 2ஆம் அலை காரணமாக தேர்வு குறித்து முடிவெடுக்காமல் இருந்த நிலையில், ஜூலை மாதம் நடைபெறலாம் எனத் தகவல்கள் வெளிவந்தது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்த பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, இன்று விடுமுறைகால சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அதில், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய அரசு என்ன முடிவெடுத்திருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இதுகுறித்து கொள்கைரீதியிலான முடிவை 3 நாட்களில் எடுக்கவும், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதற்கு மத்திய அரசு, சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக 2 நாளில் முடிவு எடுக்கப்படும் என்று தகவல் தெரிவித்தது. எனவே, பொதுத்தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை ஜூன் 3ஆம் தேதிக்கு தள்ளிவை;. சிபிஎஸ்இ நிர்வாகம் +2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்த முக்கிய ஆலோசனையில் நாளை ஈடுபடவுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Author: sivapriya