தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி முடங்கும் அபாயம்’ – மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு தாமதிப்பதால் தடுப்பூசி போடும் பணி முடங்கும் சூழல் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும் தொற்றின் வேகம் தீவிரமாக இருந்ததால், அதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 24ம் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

இதையடுத்து தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் 2ம்கட்ட தளர்வுகளற்ற ஊரடங்கு வரும் ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் 2 நாட்களுக்கு மட்டுமே போதுமானது. தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு பணம் செலுத்திய பிறகும் தடுப்பூசி விநியோகம் தாமதமாகிறது. தமிழக அரசு கூடுதலாக பணம் செலுத்திவிட்டாலும் தயாரிப்பு நிறுவனங்கள் குறைந்த அளவிலேயே தடுப்பூசிகள் தருகின்றன.

இந்த மாதத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 1.74 லட்சம் தடுப்பூசி இதுவரை வரவில்லை. ஜூன் மாதத்துக்கு தமிழகத்தில் 42.58 லட்சம் தடுப்புக்கள் தருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதுவரை தமிழகத்துக்கு 96 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. ஜூன் மாதத்துக்கான தடுப்பூசி 6-ம் தேதி தான் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 2 நாட்களுக்குள் மத்திய அரசு தடுப்பூசிகள் வழங்கினால் மட்டுமே தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும். தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகள் வழங்கும் படி பிரதமருக்கு முதல்வர் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசி 2 நாட்களில் தீர்ந்துவிடும் என்பதால் ஜூன் 3 முதல் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார்.

Facebook Comments Box
Author: sarath kumar
No