விரைவுச் செய்திகள்: பிஎஃப் முன்பணம் அனுமதி | மின்தடை நேரம் குறைப்பு | பங்குச்சந்தை உயர்வு

பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கிலிருந்து முன்பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2ஆவது அலையை கருத்தில் கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோயில் பணியாளர்களுக்கு ரூ.4000 உதவித் தொகை: மாத ஊதியமின்றி பணியாற்றும் கோயில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பணியாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது. உதவித் தொகையுடன் 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப்பொருட்களும் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

2 மணி நேரம் மட்டுமே பராமரிப்பு மின் தடை: கொரோனா ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு பராமரிப்பு பணிகளுக்கான மின் தடை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழக மின்வாரியம் கூறியுள்ளது.

பருப்பு, பாமாயில் கொள்முதல் – டெண்டர் தடை ரத்து: ரேஷன் கடைகளுக்கான பாமாயில், பருப்பு வகைகள் கொள்முதல் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நாளை 1.5 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வருகை: தமிழகத்திற்கு நாளை ஒன்றரை லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வரவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2 நாட்களுக்கு மட்டுமே ஊசிகள் கையிருப்பில் உள்ள நிலையில் புதிய தலைமுறைக்கு அளித்த தகவலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு – 2 நாட்களில் முடிவு: சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தேர்வுகளை ரத்துசெய்யக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை ஜூன் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனு தள்ளுபடி: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சசிகலாவின் எண்ணம் ஈடேறாது – கே.பி.முனுசாமி: சசிகலாவின் எண்ணம் ஈடேறாது என, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உறுதியளித்துள்ளார். அமமுகவினருடனே சசிகலா தொலைபேசியில் பேசிவருவதாகவும் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

லட்சத்தீவு அதிகாரியை திரும்பப்பெறுக: லட்சத்தீவு அதிகாரியை திரும்பப் பெற வேண்டும் என கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் – ஆந்திராவில் நீடிப்பு; டெல்லியில் தளர்வு: ஆந்திராவில் கொரோனா பொது முடக்கம் ஜூன் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

ஆந்திர டிவி சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை: ஆந்திராவில் ஆளும் கட்சியின் அதிருப்தி என்ற எம்பியின் பேட்டியை ஒளிபரப்பிய 2 டிவி சேனல்கள் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்ட விவகாரத்தில் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பங்குச்சந்தைகளில் தொடரும் உயர்வு: வாரத்தின் முதல் வணிக நாளான இன்று சென்செக்ஸ் 514 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன்படி, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சீனாவில் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி: சீனாவில் 3 குழந்தைகள் வரை தம்பதிகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இளம் வயதினர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து முதியவர்கள் அதிகரித்த நிலையில் அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Author: sivapriya