யாழ்ப்பாணப் பொது நூலகம் : 40 ஆண்டுகளுக்கு முன்னர் தீக்கிரையான அறிவு பொக்கிஷம்!

அறிவினை விரிவு செய்யும் ஆயுதம் என்றால் அது புத்தகங்கள் தான். அப்படிப்பட்ட புத்தகங்களை தன்னகத்தே சேமித்து வைத்திருக்கும் காலம் காட்டும் கருவிகள் தான் நூலகங்கள். ஒரு ஊரில் எது இருந்தாலும் இல்லாமல் போனாலும் நூலகங்கள் அவசியம் என கல்வி சார்ந்த வல்லுனர்கள் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட ஒரு நூலகம்தான் இலங்கை நாட்டின் யாழ்ப்பாண மண்ணில் இயங்கி வந்த யாழ்ப்பாணம் பொதுசன நூலகம். தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக திகழ்ந்தது நூலகம். சில வன்முறையாளர்களால் 40 வருடங்களுக்கு முன்னர் இந்த நூலகம் தீக்கிரை ஆகியுள்ளது. 

என்ன நடந்தது?

1981, ஜூன் மாத மாவட்ட சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் பிரசாரங்கள் கலை கட்டியிருந்தன. அப்போது ஒரு கூட்டணியின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கலவரம் காரணமாக துப்பாக்கி சூடு நடைபெற்றதாக அன்றைய செய்திகள் சொல்கின்றன. அதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களில் சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்து மாண்டதாக தெரிகிறது. அதை தொடர்ந்து சிங்கள ஆதரவு தரப்பு மக்கள் சிலரின் வன்முறையினால் யாழ்ப்பாணத்தை சுற்றி அமைந்திருந்து கடைகள், வணிக ஸ்தாபனங்கள், வீடுகள் என பல தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இதில் போலீசாருக்கும் பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து தமிழ் மக்களின் பொக்கிஷமாக விளங்கிய நூலகமும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த நூலகத்தில் இருந்த சுமார் 97 ஆயிரம் புத்தகங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன. தனிச்சிறப்பு மிக்க நூல்கள் அதில் எறிந்துள்ளன. 

image

நூலகத்தின் கதை?

யாழ்ப்பாண பொது நூலகம் கட்டும் பணி 1933 வாக்கில் ஆரம்பமாகி உள்ளது. தொடர்ந்து நடைபெற்ற கட்டுமான பணி நிறைவு பெற்றதும் 26 ஆண்டுகளுக்கு பிறகு 1959இல் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆர்வலர்கள், தனி மனிதர்கள் கொடுத்த பங்களிப்புகள் என ஆயிர கணக்கான புத்தகங்களுடன் நூலகம் செயல்பட தொடங்கி உள்ளது. ஓலைச்சுவடிகள், தமிழ் பத்திரிகைகளின் மூலப் பிரதிகள், கையெழுத்துப் பிரதிகள், சமயம், இலக்கியம், மொழி சார்ந்த தத்துவ நூல்கள் என பல நூல்கள் இருந்துள்ளனர். இந்த நூலகத்தின் வாசகர்களாக யாழ்ப்பாண மக்கள் மட்டுமல்லாது இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளை சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர். 

நூலகத்தை அழிப்பது மிகப்பெரிய பேரழிவாகும்!

ஒரு நாட்டில் இயற்கை வளம் சுரண்டப்படுவதென்பது எவ்வளவு பெரிய பேரழிவுகளை விளைவிக்குமோ அந்த அளவிற்கு சமாமனது தான் நூலகங்களை அழிப்பதும். வரலாற்றில் நூலகங்களை அழித்த செய்திகளை புரட்டினால் மூன்றாம் நூற்றாண்டில் சீனாவில் தொடங்கி கடைசியாக 2016 தென் ஆப்பிரிக்கா என இதுவரை சுமார் 64 நூலங்கள் மனிதர்களால் சிதைக்கப்பட்டுள்ளன. அந்த வன்முறையினால் பல அரிதான பொக்கிஷங்களை தாங்கி நின்ற நூலகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இனம், மக்கள், நாட்டை பிடிப்பது என ஒவ்வொன்றுக்கும் ஒரு செயல்களை பின்னணியாக சொல்லலாம். அண்மையில் கர்நாடகத்தில் கூட இஸ்லாமியர் குடிசை பகுதியில் நடத்தப்பட்டு வந்த நூலகம் ஒன்று தீக்கிரையானது.

யாழ்ப்பாண நூலக அழிப்பை தமிழ் மக்களின் மீது சிங்கள வெறியர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டம் எனவும் ஒரு தரப்பினர் சொல்லி வருகின்றனர். இந்த நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகியுள்ளது. 

image

இப்போது எப்படி உள்ளது?

கடந்த 2001இல் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு யாழ்ப்பாண பொது நூலகம் மீண்டும் இயங்கி வருகிறது. தீயில் எரிந்த புத்தகங்களை இங்கு சேகரிக்க முடியாமல் போனாலும் புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் புத்தகங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவது ஒரு ஆறுதல். 

Author: sivapriya