இந்தியாவில் டி20 உலகக்கோப்பை எப்போது? இன்று ஆலோசனை

இந்தியாவில் டி20 உலகக்கோப்பை போட்டியை எப்போது எப்படி நடத்துவது என்பது குறித்து ஐசிசியுடன் காணொலி வாயிலாக பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.

இந்தியாவில் கொரோனா  கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அண்மையில் பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் ஐபிஎல் தொடரின் எஞ்சியப் போட்டிகளை செப்டம்பர் – அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்த ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், இன்று நடைபெறவுள்ள ஐசிசியுடனான ஆலோசனையில் உலகக் கோப்பை டி20 தொடரை நடத்துவது குறித்து சாத்தியக்கூறுகளை ஆராய மேலும் எங்களுக்கு கால அவகாசம் தேவை என்று பிசிசிஐ தெரிவிக்கும் என கூறப்படுகிறது.

இப்போது இந்தியாவில் நிலவும் மோசமான சூழலை கருத்தில் கொண்டு, மீண்டும் சில நாட்கள் கழித்து, இதுகுறித்து முடிவு செய்யலாம் என ஆலோசனையில் தெரிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Author: sivapriya