தனியார் தொலைக்காட்சிகள் மீது நடவடிக்கை: உச்சநீதிமன்றம் தடை

ஆந்திராவில் இரண்டு தனியார் டிவி சேனல்கள் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஆந்திராவில் ஆட்சியில் உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை, அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ரகுராம கிருஷ்ணம் ராஜூ தொடர்ந்து விமர்சித்து வந்தார். கொரோனா சூழலை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முறையாக கையாளவில்லை என அவர் குற்றம்சாட்டினார். அவரது கருத்துகளை ஒளிபரப்பியதற்காக இரண்டு தனியார் டிவி சேனல்கள் மீது ஆந்திர மாநில அரசு தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தது.

இதனையடுத்து டிவி சேனல்களின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆந்திர அரசின் செயல்பாடு ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், இரண்டு டிவி சேனல்கள் மீதும் ஆந்திர அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டார்.

மேலும், ஆந்திர அரசின் செயல்பாடு ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் இருப்பதாகவும், தேசத் துரோகத்திற்கான வரையறை குறித்து நீதிமன்றம் கூற தேவை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Author: sivapriya