கொரோனா ஊரடங்கு; ரூ.4,000 கோடி வரை நஷ்டத்தை சந்தித்துள்ள திரைத்துறை

கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழ் திரையுலகம் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை நஷ்டத்தை சந்தித்துள்ளது என்கின்றனர் திரைத் துறையினர். பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் திரைத்துறையை மீட்பதோடு, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவ தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

தமிழ் திரையுலகில் ஆண்டுக்கு சுமார் 200 திரைப்படங்கள் வெளியாவது வழக்கமாக இருந்தது. இதன்மூலம் சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்றதோடு, அரசுக்கு வரி வருவாய் கிடைத்தது. ஆனால் கடந்தாண்டு கொரோனாவால் விதிக்கப்பட்ட முழு முடக்கம் முதல் தற்போதுவரை நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாக திரைத்துறையினர் கூறுகின்றனர். திரைத்துறை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டதாக பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். அரசுக்கு பெரும் வருவாய் தரக்கூடிய சினிமாத்துறை அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக இல்லாததால், திரைத்துறையினருக்கும் தொழிலாளர்களுக்கும் அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை என்றும் இந்த ஊரடங்கில் மட்டும் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறுகிறார் ஆர்.கே.செல்வமணி.

அரசுக்கும் திரைத்துறைக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளதால் சலுகைகளைக்கூட பெறமுடியாமல் தவிக்கும் சினிமாத்துறையை உயிர்ப்பித்து தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். குறிப்பாக ஊரடங்கு முடிந்தபின் ஆறு மாதத்திற்கு வரிச்சலுகை உள்ளிட்டவைகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றனர். ஊரடங்கு முடிந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்க சிலகாலம் ஆகும் என்பதால், வேலையின்றி தவிக்கும் திரைத்துறை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு மட்டுமல்லாமல் பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோரும் உதவ முன்ரவேண்டும் என ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya