பிரதமர் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? மேற்குவங்க முன்னாள் தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்

பிரதமர் கூட்டத்தை புறக்கணித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என மேற்குவங்க மாநில முன்னாள் தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

யாஸ் புயல் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்தில் விமானம் மூலம் புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி நேரடியாக கண்டறிந்த பிறகு மேற்குவங்க முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்குபெறும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பங்குபெற மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி அழைக்கப்பட்டிருந்தார். இதனால் அதிருப்தியடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு தாமதமாக வந்தார். பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்காக அரைமணி நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

image

இந்த விவகாரம் சர்ச்சையானதை தொடர்ந்து, மேற்குவங்க தலைமைச் செயலாளர் அலபன் பண்டோபாத்யாயாவை உடனடியாக டெல்லியில் உள்ள பணியாளர் பயற்சி துறைக்கு மே 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அவரை அனுப்பி வைக்க முடியாது என முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்து விட்டார். இதனிடையே அலபன் பண்டோபாத்யாயா பதவிக்காலம் நேற்றுடன் (மே 31)  முடிந்தது. அவரை முதல்வரின் தலைமை ஆலோசகராக நியமித்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார்.

இந்தநிலையில் யாஸ் புயல் தொடர்பான பிரதமர் மோடி கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது குறித்து  3 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என அலபன் பண்டோபாத்யாவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Author: sivapriya