கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு – ஆர்வமுடன் வந்து ஏமாற்றத்துடன் செல்லும் மக்கள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்த மக்கள், திருப்பி அனுப்பப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர்.

கொரோனாவை வெல்லும் ஒரே பேராயுதம் தடுப்பூசி தான். அதுகுறித்து விழிப்புணர்வு அடைந்த மக்கள் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வமும் காட்டிவருகின்றனர். ஆனால் செலுத்துவதற்கு தடுப்பூசி தான் இல்லை. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக மையங்கள் செயல்படவில்லை. இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

image

மதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் தடுப்பூசி போட வருகின்றனர். ஆனால் போதிய அளவில் கையிருப்பு இல்லாததால் 700 பேருக்கு மட்டுமே டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் தடுப்பூசி போட குவிந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் ஜூன் 2 முதல் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை அரசு மருத்துவமனை மற்றும் ஒரு தடுப்பூசி மையம் தவிர மற்ற மையங்களுக்கு வந்த மக்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

திருச்சியை பொறுத்தவரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மணப்பாறை அரசு மருத்துவமனையிலும் மட்டுமே குறைந்த அளவு தடுப்பூசி இருப்பு உள்ளது. தடுப்பூசி முகாம்கள் கடந்த நான்கு நாட்களாக செயல்படவில்லை. இப்படி பல்வேறு மாவட்டங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya