மும்பை: காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று கிச்சனிலேயே புதைத்த பெண் கைது

மும்பையில் காதலனின் உதவியுடன் கணவரைக் கொன்று கிச்சனில் புதைத்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மும்பையின் தஹிசர் சாவல் பகுதியிலுள்ள ராவால்பாடாவைச் சேர்ந்தவர் ராயிஸ் ஷாயிக். இவருக்கு கடந்த 9 வருடங்களுக்கு முன்பு ஷாகிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது. தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஷாயிக் கடந்த மே 21ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என அவரது மனைவி ஷாகிதா தஹிசர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

அவர் கொடுத்த புகாரின்பேரில் அந்தப் பகுதிக்குச் சென்ற போலீஸார் இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது ஷாகிதாவுக்கு பக்கத்து வீட்டில் வசித்துவரும் அமித் விஷ்வகர்மா என்ற பாதுகாப்பு பணியாளருடன் தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் மே 21ஆம் தேதிக்கு பிறகு அமித் காணாமல் போனதைத் தெரிந்துகொண்ட போலீஸாருக்கு ஷாகிதா மீது சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கவே, போலீஸார் அவருடைய வீட்டை சோதனையிட்டிருக்கின்றனர்.

image

சோதனையின்போது ஷாகிதா வீட்டு கிச்சனில் புதிதாக டைல்ஸ் ஒட்டப்பட்டு இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த போலீஸார், டைல்ஸ்களை அகற்றிவிட்டு அந்த இடத்தை தோண்டியதில் அங்கு சாக்குப்பையில் சடலம் இருந்ததைக் கண்டறிந்திருக்கின்றனர். இதுகுறித்து ஷாகிதாவிடம் விசாரணையை முடுக்கியபோது, அவர் தனது காதலன் அமித்துடன் சேர்ந்து கணவனை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அமித்தின் உதவியுடன் ஷாயிக்கின் உடலை சாக்குப்பையில் கட்டி, சந்தேகம் வராமல் இருக்க கிச்சன் டைல்ஸை எடுத்து அடியில் புதைத்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஷாகிதா கொடுத்த வாக்குமூலத்தை வைத்து அவரை கைதுசெய்த போலீஸார், தலைமறைவாகியுள்ள அமித்தை வலைவீசி தேடிவருகின்றனர்.

Facebook Comments Box
Author: admin