கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளை காக்க, வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு

கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், மூன்றாவது அலையில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவர் என கணிக்கப்பட்டிருப்பதாலும், அரசு தற்போது குழந்தைகள் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அதனொரு பகுதியாக, கொரோனா பாதிக்கப்படும் குழந்தைகளை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை செயலர் ராம் மோகன் மிஷ்ரா சார்பில் மாநில மற்றும் யூனியன் அரசுகளின் தலைமைச் செயலர்களுக்கு இந்த வழிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளது. உடன் அந்தக் கடிதத்தில், கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான வசதிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது. 

image

அதில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள்:

  • மாநில அரசுகள், கொரோனா தொற்றால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கும் குழந்தைகளை கண்டறிய வேண்டும். அதுபற்றிய தரவுகளை தயார் செய்து, அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அனைத்து தகவல்களையும் ‘ட்ராக் சைல்ட் போர்டல்’ தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், தற்காலிகமாக குழந்தைகள் பாதுகாப்பு மையங்களை உருவாக்க வேண்டும். அங்கு, உடல்நலம் குன்றிய நிலையிலுள்ள பெற்றோரை கொண்ட குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். ஒருவேளை அவர்களை கவனித்துக்கொள்ள குடும்பத்தினர் யாரும் இல்லையென்றால், அவர்களை முழுமையாக கவனித்துக்கொள்ள வேண்டும்.
  • மருத்துவமனை நிர்வாகங்கள் மூலமாக, சிறு குழந்தைகளின் பெற்றோர் யாரும் தங்கியிருக்கின்றார்களா என்பதை மாநில அரசுகள் அறிய வேண்டும். அப்படி இருந்தால், அக்குழந்தைகளை யாரின் பாதுகாப்பில் கவனித்துக்கொள்ளலாம் என பெற்ரோரிடம் கேட்டு தெரிந்துக்கொண்டு, குறிப்பிட்ட அந்த நம்பிக்கைக்குரிய நபரிடம் குழந்தையை ஒப்படைக்கும் பொறுப்பை மாநில அரசுகள் ஏற்க வேண்டும்.
  • குழந்தைகளை கவனித்துக்கொள்ள நிர்வகிக்கப்படும் மையங்களில், கோவிட் 19 தொற்று ஏற்பட்ட குழந்தைகள் தனித்திருக்கும் படியான வசதிகள் இருக்கவேண்டும். உடன், அங்கு அவர்களுக்கு மனநல பாதிப்புகள், அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க, குழந்தைகள் நல ஆர்வலர்கள் – குழந்தைகள் மனநல ஆலோசகர்கள் உடனிருக்க வேண்டும்.
  • அனைத்து மாநிலங்களிலும், மன அழுத்தத்துக்கு உள்ளாகும் குழந்தைகளை காக்க, டெலி கவுன்சிலிங் வசதிகள் அரசு சார்பில் ஏற்பாடு செய்து தரப்பட வேண்டும். உரிய நிபுணர்கள், குழந்தைகளை தொலைபேசி மூலமாக வழி நடத்த வேண்டும். இதற்காக, அனைத்து மாநிலங்களிலும் ஹெல்ப்லைன் எண் உருவாக்கப்பட வேண்டும்.

image

  • மாவட்ட அளவில், பலத்துறை நிபுணர்கள் இணைந்த குழுவொன்று அமைக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள குழந்தைகளின் பாதுகாப்பு அன்றாடம் உறுதிசெய்யப்பட வேண்டும். குறிப்பாக, பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைத்திருப்பதை அவர்கள் உறுதிசெய்யவேண்டும். மாவட்டத்தில் எந்த இடத்திலும் எந்தவொரு குழந்தைக்கு பிரச்னை இருந்தாலும், அவர்களைப் பற்றிய விவரங்கள் உடனுக்குடன் இவர்களுக்கு தெரியவருமாறு இவர்கள் தங்களை விரிவுப்படுத்திக்கொள்வது முக்கியம்.
  • அனைத்து மாவட்ட காவல் பிரிவினரும், குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். குழந்தை கடத்தல், சட்டத்துக்கு புறம்பாக குழந்தை தத்தெடுத்தல், குழந்தை திருமணம் என குழந்தைகளுக்கு எந்தவொரு குற்றம் நடப்பதையும் முழுமையாக தடுக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் உருவாவதையும் தடுக்க வேண்டும்.
  • அனைத்து பஞ்சாயத்து அமைப்புகள், அவர்கள் அளவில் எந்தவொரு குழந்தைக்கு பிரச்னை என்றாலும், அதை மாவட்ட குழந்தை நல நிர்வாகத்துக்கும், குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்கும் நிர்வாகத்துக்கும் அதை தெரியப்படுத்த வேண்டும். அக்குழந்தைகளை காக்க முனைய வேண்டும்.
Author: sivapriya