மகாராஷ்டிரா: ரசாயன தொழிற்சாலையில் எரிவாயு கசிவு; சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் பரபரப்பு

மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் பொதுமக்களில் சிலருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

மகாராஷ்டிராவின் பத்லாப்பூரில் தனியாருக்கு சொந்தமான ஒரு ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று (வியாழக்கிழமை) இரவு 10:22 மணியளவில் இந்த தொழிற்சாலையில் இருந்து திடீரென்று எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த மக்களில் பலருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். 

இதையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் எரிவாயு கசிவை கண்டறிந்து கசியாதவாறு அடைத்து, தொழிற்சாலை இயந்திர செயல்பாட்டை நிறுத்தினர். இந்நிகழ்வால் யாருக்கும் உயிரிழப்போ, உடல்நல பாதிப்போ ஏற்படவில்லை எனவும் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் தானே மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் கசிந்த எரிவாயுவில் நச்சு இல்லை என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர். எரிவாயு கசிவுக்கான காரணம் குறித்து காவல்துறை, தீயணைப்புத்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

Facebook Comments Box
Author: sivapriya