வேலூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பதை தடுக்க மலைப்பகுதிகளில் ரோந்து பணி

வேலூர்

தடுக்க நடவடிக்கை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதனால் வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவதை தடுக்கவும், மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பதை தடுக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் அதையும் மீறி அணைக்கட்டு, பேரணாம்பட்டு தாலுகாவில் உள்ள மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சி பாக்கெட்டுகளில் நிரப்பி பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சி பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வதை தடுக்க போலீசார் முக்கிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது கூடுதலாக போலீசார் மலைப்பகுதிகளில் வாகனங்களில் ரோந்து செல்கிறார்கள்.

வியாபாரிகளிடம் விசாரணை

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் வெல்லமும் ஒன்றாகும். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பின்னர் டன் கணக்கில் வெல்லம் வாங்கிய நபர்கள் குறித்து வேலூர் வெல்லமண்டி வியாபாரிகள் மற்றும் மொத்த விற்பனை வியாபாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மலைப்பகுதியை சேர்ந்த நபர்கள் புதிதாக வெல்லம் வாங்கினார்களா என்றும் கண்டறியப்பட்டு வருகிறது.

அதைத்தவிர மலைப்பகுதிகள் மற்றும் அங்கு செல்லும் பகுதிகளில் வாகன சோதனை மற்றும் கூடுதலாக வாகனங்களில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Facebook Comments Box
Author: sivapriya