“விராட் கோலிதான் பெஸ்ட், வேறு யாரும் இல்லை” – பிரெட் லீ

இப்போதுள்ள கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

ஐசிசி நடத்திய நேர்காணலில் பேசிய அவர் “அண்மை காலங்களில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று பார்த்தால், எனக்கு விராட் கோலியை தவிர வேறு யாரும் கண்ணுக்கு தெரியவில்லை. அவருடைய சாதனைகள் அபாரமானது. அவரின் வயது கூட கூட இன்னும் கூட சிறப்பாக விளையாடுவார். அவருக்கு கிரிக்கெட்டின் மீதான ஞானம் அபாரமாக இருக்கிறது. மூளை எப்போதும் கிரிக்கெட் குறித்தே யோசிக்கிறது. மேலும் இந்திய அணிக்கு உத்வேகம் தரக் கூடிய நபராகவும் இருக்கிறார் கோலி” என்றார்.

image

மேலும் பேசிய அவர் “உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தேசத்தின் கனவை சுமந்துகொண்டு இருக்கிறார் கோலி. இப்போது நியூசிலாந்து அணியுடன் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற இருக்கிறது. மிக முக்கியமான போட்டிகளில் இந்தியாவை காப்பாற்றியிருக்கிறார் கோலி. அதேபோல இந்த முறையும் அவர் சிறப்பாக விளையாடுவார் என நினைக்கிறேன். அதேபோல இப்போதுள்ள கிரிக்கெட் உலகில் தலைச் சிறந்த பவுலர் என்றார் அது பாட் கம்மின்ஸ் மட்டுமே” என்றார் பிரெட் லீ.

தொடர்ந்து பேசிய அவர் “நியூசிலாந்தின் வில்லியம்சன் இயல்பான ஒரு கேப்டன். மிகச்சிறந்த கிரிக்கெட் அறிவு மிக்கவர். பொறுமைசாலி. தேவைப்படும் போது தாக்குதல் பாணியை கையில் எடுப்பார். இதற்கு நேர் எதிரானவர் இந்திய கேப்டன் விராட்-கோலி. எப்போதும் அதீத ஆக்ரோஷமாக செயல்படக் கூடியவர். வெவ்வேறு அணுகுமுறையை கொண்ட இவர்களில் யாருடைய கை ஓங்கப் போகிறது என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்” என்றார் பிரெட் லீ.

Author: sivapriya