தகாத வார்த்தைகளால் பெண் காவல் ஆய்வாளர் திட்டியதாக தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர்

தகாத வார்த்தைகளால் பெண் காவல் ஆய்வாளர் பேசியதாகக்கூறி பெண் காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காவல் நிலையத்தில் 23 வயதான கஜலட்சுமி என்பவர் 2 ஆண்டுகளாக காவலராக பணிபுரிந்து வருகிறார். ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கஜலட்சுமியின்  தாய் தந்தை இருவருக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விடுப்பு எடுத்துக்கொண்டு பெற்றோரை பார்க்க சென்ற கஜலட்சுமி அங்கு தங்க முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று  பணியில் இருக்கும்போது திருப்போரூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி பெண் காவலர் கஜலட்சுமியை பெண்களை இழிவு படுத்தும் விதமாக தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளான கஜலட்சுமி பணி முடிந்து பெண் காவலர்கள் தங்கும் விடுதிக்குச் சென்ற அவர் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை முயற்சி செய்து மயங்கி விழுந்தார். இதனையடுத்து உடன் இருந்த சக காவலர்கள் அவரை திருப்போரூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் முதலுதவி செய்து கஜலட்சுமியை காப்பாற்றினர்.

திருப்போரூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி உடன் பணிபுரியும் சக காவலர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதாகவும், இதனால்  இதனால் சக காவலர்கள்  மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திருப்போரூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி மீது உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்பதே சக காவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

Facebook Comments Box
Author: sivapriya