நீட் தேர்வை நடத்த முயன்றால் எதிர்த்து போராடுவோம் – அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தினால் அதை எதிர்த்து போராடுவோம் என்று தெரிவித்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
 
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அக்குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
 
image
அதில், தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார். தமிழகத்தில் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் உகந்ததாக இருக்காது, மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பேட்டியில், ”மாணவர்களின் உடல்நலனை கருத்தில்கொண்டு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். நீட் தேர்வு ஒரே ஒரு நாள் நடைபெறும் தேர்வு என்றாலும் அன்றைய நாள் மூலம் மாணவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தினால் அதை எதிர்த்து போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya