டிவி பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் உள்புகுந்த கொள்ளையர்கள்; விவசாயிக்கு சரமாரி வெட்டு

வீட்டில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தபோது விவசாயியை மர்ம நபர்கள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் பனமரத்துப்பட்டி அருகே குள்ளப்பநாயக்கனூர் பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி(68). விவசாயம் செய்து வரும் இவரும் இவரது குடும்பத்தினரும் நேற்று  குடும்பத்துடன் வீட்டுக்குள் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தனர். அப்பொழுது வீட்டின் பின்புறம் உள்ள தடுப்பு சுவற்றை தாண்டி முகமூடி அணிந்திருந்த இரண்டு கொள்ளையர்கள் கையில் பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து, வீட்டிலுள்ள நகைகள் மற்றும் பணத்தை எடுத்து தருமாறு மிரட்டியுள்ளனர். இதனை தடுக்க முற்பட்ட  பழனிச்சாமியை  கொள்ளையர்கள் தோள்பட்டை மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டினர்.

தந்தை வெட்டுபடுவதை கண்ட மகன் சதீஷ்குமார் வீட்டிலிருந்து வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். பின்னர் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதைக் கண்ட முகமூடி அணிந்து இருந்த இரண்டு கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் படுகாயமடைந்த பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து மல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Facebook Comments Box
Author: sivapriya