“தமிழர்கள் மீது வன்மம்… ‘தி ஃபேமிலி மேன்’ 2 தொடரை தடை செய்க” – சீமான், வேல்முருகன்

தமிழர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் “தி பேமிலி மேன் 2” இணையத் தொடரின் ஒளிபரப்பை நிறுத்தாவிட்டால் அமேசானை உலகத் தமிழர்கள் புறக்கணிப்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமேசான் பிரைம் தலைமை அதிகாரி அபர்ணா புரோகித்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழர்களை சீண்டும் வகையில் திட்டமிட்டு வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ள “தி பேமிலி மேன் 2” இணையத் தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் கொச்சைப்படுத்தும் ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடருக்கு தடை விதிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பேமிலி மேன் தொடர் தமிழர்கள் மீதான வன்மத்துடன் காட்சிப்படுத்தபட்டுள்ளது வெளிப்படையாக தெரிவதாக கூறியுள்ளார்.

தமிழ் ஈழ விடுதலைப் போரில் உயிர் நீத்த போராளிகளை கொச்சைப்படுத்தியிருப்பதாகவும், தமிழர்களின் வரலாற்றை திரித்துக் கூறுவது பெரும் குற்றம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தயாரிப்பாளர், இயக்குநர், படக்குழுவினர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

 

Facebook Comments Box
Author: sivapriya