மும்பை: சலூன்கள், ஜிம்கள் இன்றுமுதல் திறக்க அனுமதி

புதிய வழிகாட்டுதலின்படி, மும்பையில் இன்றுமுதல் சலூன்கள், ஜிம்கள், உணவகங்கள் திறக்கப்படவுள்ளது.

மும்பையில் இரண்டு மாத கொரோனா தொற்று ஊரடங்குக்கு பிறகு இன்று முதல் மீண்டும் கடைகள் திறக்கப்படவுள்ளதால், முடி திருத்தும் நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் கடைகள் மற்றும் உணவகங்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் கடைகளில் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

மகாராஷ்டிர அரசு வெளியிட்ட ‘பிரேக் தி செயின்’ வழிகாட்டுதலின் கீழ் வெளியிடப்பட்ட புதிய உத்தரவின் படி, அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் நகரத்தில் அனைத்து நாட்களிலும் மாலை 4 மணி வரை திறந்திருக்கும். அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் வார நாட்களில் மாலை 4 மணி வரை திறந்திருக்கலாம்.

உணவகங்களைப் பொறுத்தவரை, வார நாட்களில் மாலை 4 மணி வரை 50 சதவீத இருக்கை வசதியுடன் உணவருந்த அனுமதிக்கப்படுகிறது, அதன்பிறகு, பார்சல் மற்றும் வீட்டு விநியோகம் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அத்தியாவசியமற்ற கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Facebook Comments Box
Author: sivapriya