தொடர்ந்து குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு – இன்று 19448 பேருக்கு தொற்று உறுதி

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 19,448 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 351 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 31,360 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 2,32,026 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

பாதிக்கப்பட்ட 19,448 பேரில் இருவர் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவை சார்ந்தவர்கள். தலைநகர் சென்னையில் 1530 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 2564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு, திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

10,765 ஆண்களும், 8,683 பெண்களும் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை, கடந்த ஒரு மாதத்தில் புதிய உச்சம் பெற்றுள்ளது.(நேற்றைய நிலவரப்படி)

தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதி வரை 22 லட்சத்து 37 ஆயிரத்து 233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 43 சதவிகிதம் பேர், அதாவது 12 லட்சத்து 97 ஆயிரத்து 500 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் நேற்று வரை 27 ஆயிரத்து 5 பேர் இறந்துள்ளனர். அவர்களில் கடந்த 30 நாட்களில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 33ஆக உள்ளது. அதாவது 46 விழுக்காட்டினர் ஒரே மாதத்தில் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட முதல் இரண்டு அலைகளில் ஏற்பட்ட உயிரிழப்பில், சரி பாதி ஒரே மாதத்தில் நிகழ்ந்துள்ளது. 

 

Facebook Comments Box
Author: sivapriya