தெப்பக்காடு முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரிகள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

image

ஏற்கெனவே முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்தனர். யானைகளுக்கு உணவு வழங்குவதற்காக வரிசையில் நிறுத்தக் கூடாது, யானைகளுக்கு இடையே சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், யானை பாகன்கள் தேவையின்றி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை முதுமலை வனத்துறை விதித்தது.

இதையடுத்து தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதா என்பதை கண்டறிய மாதிரிகள் சேகரிக்கும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. யானைகளின் தும்பிக்கை மற்றும் ஆசனவாய் பகுதியில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. யானைகள் அனைத்தையும் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வரவழைத்து வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மாதிரிகளை சேகரித்து வருகிறார். இன்று மதியமே சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட இருக்கிறது.

 

Facebook Comments Box
Author: sivapriya