’50 மதிப்பெண்களுக்கு கொள்குறி தேர்வு’ – ப்ளஸ் 1 சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்தான நிலையில், மாணவ-மாணவிகளுக்கு பதினோறாம் வகுப்பு பாடப் பிரிவுகளை ஒதுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வி ஆணையம் வெளியிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினோறாம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு பிரிவிலும் அனுமதிக்கப்படும் இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மாணவர்கள் விருப்பம் தெரிவிக்கும் பாடப் பிரிவை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பாடப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில், ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம் என தெரிவித்துள்ளது.

அதையும் கடந்து மிக அதிகப்படியான மாணவர்கள் ஒரு பிரிவில் சேர விருப்பம் தெரிவித்தால், அவர்களுக்கு அதே பிரிவின் முந்தைய பாடத்தில் இருந்து 50 மதிப்பெண்களுக்கு கொள்குறி தேர்வு நடத்தி அதற்கேற்ப மாணவர்களுக்கு பிரிவுகளை ஒதுக்கலாம் என பள்ளிக் கல்வி ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 3வது வாரத்திலிருந்து பதினோறாம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல்படி பாடங்களை நடத்தலாம் எனவும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி, இணைய வழியில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம் எனவும் பள்ளிக் கல்வி ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Facebook Comments Box
Author: sivapriya