பல அலைகளுக்கு பிறகு பருவகால தொற்றாக கொரோனா மாறலாம்: எய்ம்ஸ் இயக்குநர்

கொரோனா மூன்றாவது அலையால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது தவறான தகவலாகும். இதை நிரூபிப்பதற்கான எந்தவொரு தரவும் இந்திய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ இல்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். மேலும், பல அலைகளுக்கு பிறகு பருவகால தொற்றாக கொரோனா மாறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறும்போது, “இரண்டாம் அலையின்போது பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு இணை நோய்த்தன்மை அல்லது குறைந்தளவு நோய் எதிர்ப்பு சக்தி இருந்ததது; லேசான பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படாமலே குணமடைந்தனர்.

எதிர்கால அலைகளை தடுப்பதற்கு முறையான கொரோனா நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். அலைகள் உருவாவதை தவிர்க்க வேண்டுமென்றால், குறிப்பிடத்தகுந்த அளவு மக்கள் தடுப்பூசி பெறும் வரை கொரோனா விதிமுறையை நாம் பின்பற்ற வேண்டும். வைரஸ் மாற்றமடையும்போது, அதிக பாதிப்பு ஏற்படுத்தும் வகைகள் உருவாகின்றன. தொற்று குறைந்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது, கொரோனா நடத்தை விதிமுறைகளை மக்கள் பின்பற்றாமல் போவதால் புதிய அலை உண்டாகிறது.

சுவாச பாதிப்பு ஏற்படுத்தும் வைரஸான கொரோனா, இப்படி பல அலைகளாக தாக்கும். 1918-ல் ஸ்பானிஷ் காய்ச்சலின்போதும், 2009-ல் பன்றிக் காய்ச்சலின் போதும் இதுதான் நடந்தது. பல அலைகளுக்கு பிறகு பருவகால தொற்றாக கொரோனா மாறலாம்” என்றார் டாக்டர் ரன்தீப் குலேரியா.

 

Facebook Comments Box
Author: sivapriya