காஞ்சிபுரம்: பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவ அலுவலர் மீது பெண் ஊழியர் புகார்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, ஹோமியோபதி உதவி மருத்துவ அலுவவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில், கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து தட்டச்சு பணியாளராக பெண்ணொருவர் பணிபுரிந்து வருகிறார். இதே வளாகத்தில் ஹோமியோபதி மருத்துவ பிரிவு உள்ளது. ஹோமியோபதி மருத்துவ பிரிவில் மருத்துவ அலுவலர் முத்துகிருஷ்ணன் என்பவர் உதவி மருத்துவ அலுவலராக பணிபுரிகின்றார். இந்த முத்துகிருஷ்ணன், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளதாக, பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட சித்த மருத்துவ அலுவலரிடம்  புகார் அளித்துள்ளார்.

image

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகார் மனுவில்,

‘கடந்த 18ம் தேதி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அய்யாசாமி அலுவலகம் வரவில்லை. 50 சதவீத ஊழியர்கள் மட்டும்தான் பணிக்கு வரவேண்டுமென கூறி இருந்தபடியால், முதல் தளத்தில் ஊழியர் முத்துகிருஷ்ணன் மட்டும் பணிக்கு வந்திருந்தார். அன்றைய தினம் மதியம் அலுவலகத்தில் யாரும் இல்லாதபோது, அவர் முதல் தளத்தில் டைப்பிங் செய்து கொண்டிருந்த என்னிடம் தவறாக நடந்துக்கொள்ள முயன்றார்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “என்னை மாவட்ட அலுவலர் அறைக்கு முத்துக்கிருஷ்ணன் அழைத்தார். அன்றைக்கு மாவட்ட அலுவலர் அலுவலகம் வராததை கூறி, ‘மாவட்ட அலுவலர் அறைக்கு என்னை ஏன் அழைக்கின்றீர்கள்’ என கேட்டேன். கேள்வி கேட்டுக் கொண்டிருந்த போதே முத்துகிருஷ்ணன் திடீரென என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவர் பிடியிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு முதல் தளத்தின் வராண்டாவில் அழுது கொண்டே வந்து நின்றேன். அப்போது எதேச்சையாக சித்த மருத்துவர் ராஜலக்ஷ்மி முதல் தளத்துக்கு வருவதை கண்ட முத்துகிருஷ்ணன், உடனடியாக கீழே இறங்கி சென்று விட்டார். பின் சித்த மருத்துவர் ராஜலட்சுமி பைக்கில் வீட்டுக்கு கிளம்பியதை உறுதி செய்து கொண்டு, மீண்டும் முதல் தளத்துக்கு வந்து என்னிடம் பாலியல் தொந்தரவு அளிக்க முயற்சித்தார் முத்துகிருஷ்ணன்.

image

அந்த வளாகத்தில் யாரும் இல்லாததால் முத்துகிருஷ்ணனிடம் என்னை விட்டுவிடும்படி மன்றாடி கேட்டுக் கொண்டேன். இருப்பினும் அவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சுதாரித்துக்கொண்டு  என்னுடைய கணவருக்கு போன் செய்து அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தேன். என் கணவனிடம் அப்போது கூறினால் பிரச்சினை பெரிதாகும் என்ற பயத்தினால் என்னுடைய அலுவலக பணிகளை முடித்து கொண்டு வீட்டிற்கு சென்ற பிறகு நடந்ததை கூறினேன். ஏற்கெனவே முத்துகிருஷ்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  இதேபோல் பாலியல் சீண்டல் செய்ததையும், வெளியே கூறினால் பிரச்சினை ஏற்படும் எச்சரித்ததையும் என் கணவரிடத்தில் தெரிவித்தேன்.

‘எங்கே எனக்கு அரசாங்க வேலை போய் விடுமோ’ என்ற பயத்தில் இவ்வளவு நாட்கள் வெளியே கூறாமல் இருந்தேன்” என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார் அப்பெண். தற்போது  சூழலறிந்து, முத்துகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஐயப்பன், இந்திய மருத்துவர் சங்கத்தின் ஹோமியோபதி துறை மற்றும் அரசு ஊழியர் சங்கம் ஆகியோர்களிடம் இந்த புகார் மனு அளித்து உள்ளார் அவர்.

 

Facebook Comments Box
Author: sivapriya