விஸ்வநாதன் ஆனந்த் Vs அமீர்கான்… – கொரோனா உதவிக்காக களமிறங்கிய நட்சத்திரங்கள்!  

கொரோனா இரண்டாம் அலை பேரிழவுக்கு நிதி திரட்டும் விதமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் புதிய முன்னெடுப்பொன்றை மேற்கொள்கிறார். அதன்படி அவர் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடவிருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில், பாதிப்புக்கு உதவும் வகையில் செலிபிரிட்டிகள் பலரும், நிறுவனங்கள் பலவும் நிதி திரட்ட முன்வந்துள்ளன. அதன்படி, நிதி திரட்டும் நிகழ்வுகள் நடத்தப்பட இருக்கின்றன. இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை, உதவி தேவைப்படும் மக்களுக்கு நன்கொடையாக வழங்க முடியும் என்பதால் பல பிரபலங்களை கொண்டு இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

அதனொரு பகுதியாக கொரோனாவால் பாதிக்கப்படும் சதுரங்க விளையாட்டைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உதவிடும் வகையில் ‘செக்மேட் COVID’ என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறது தனியார் அமைப்பான செஸ்.காம்.

image

ஜூன் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமீர்கான், ஐந்து முறை உலக சாம்பியனும் இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்துடன் விளையாடுவார் என அறிவிதுள்ளது செஸ்.காம் இந்தியா. இதுதொடர்பாக வெளியிட்ட ட்வீட்டில், “நீங்கள் அனைவரும் காத்திருக்கும் தருணம்! சூப்பர் ஸ்டார் அமீர்கான் ஒரு சதுரங்க விளையாட்டு காதலன். அவர் முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்திற்கு எதிராக ஒரு கண்காட்சி போட்டியில் விளையாடுவார்” என்று கூறப்பட்டுள்ளது.

நடிகர் அமீர்கான் சதுரங்க விளையாட்டை அதிகம் விரும்பும் நபர். அவருடன் படங்களில் பணிபுரிந்த துணை நடிகர்கள் பலரும் பட ஷூட்டிங்கின் இடைவேளையில் அவர் செஸ் விளையாடியதை பல முறை மீடியாக்களில் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், ஏற்கெனவே கடந்த காலங்களில் சதுரங்க ஜாம்பவான் என அறியப்படும் விஸ்வநாதன் ஆனந்த் உடன் அமீர்கான் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

image

இப்போது மீண்டும் மோதவிருப்பது சதுரங்க விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. முன்னதாக மற்றொரு பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு இந்த நிகழ்வை விளம்பரப்படுத்தினார், அதில் அவர் நிகழ்வு குறித்த விவரங்களை வழங்கியதோடு, ரசிகர்கள் நன்கொடை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அக்ஷய பத்ரா அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தப்படும் இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியானது சதுரங்க விளையாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல், கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டு அபாயத்தில் இருக்கும் தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் சேவை செய்ய பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13 மாலை 5-8 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு யூடியூப் சேனலான செஸ்.காம் இந்தியாவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கிறது.

 

Facebook Comments Box
Author: sivapriya