மும்பையில் பலத்த மழை: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து 11 பேர் பலி; 8 பேர் காயம்

மும்பையில் பலத்த மழை எதிரொலியாக 4 அடுக்கு குடியிருப்பு இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மும்பையில் பெய்த கனமழையால் ரயில் வழித்தடங்கள் மூழ்கியது. இதன்காரணமாக ரயில் போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் பலத்த மழை காரணமாக மும்பையில் பல்வேறு சாலைகள் தண்ணீரில் மூழ்கியதால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் மலாட் மேற்கு பகுதியில் உள்ள பழமையான 4 அடுக்கு குடியிருப்பு நேற்றிரவு 10 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில் வீடுகளுக்குள் இருந்த 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டடத்திற்குள் மேலும் சிலர் இருந்த நிலையில் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் இருந்த குடியிருப்புகளில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் மும்பையில் பழமையாக வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Facebook Comments Box
Author: sivapriya