சென்னை: ஆன்லைனில் வாடகைக்கு வாகனங்களை விடுவதாகக்கூறி ரூ.30,000 மோசடி; ஒருவர் கைது

இணையதளம் மூலம் வாகனங்களை வாடகைக்கு விடுவதாகக்கூறி ரூ. 30 ஆயிரம் மோசடி செய்த புகாரில் மோசடி நபரை அடையாறு சைபர் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் கார்த்திகேயன். இவர் தனது வேலை நிமித்தமாக நிறுவனத்தில் இருந்து சில பொருட்களை வெளியூருக்கு கொண்டு செல்ல சரக்கு வாகனங்களை வாடகைக்கு தேடி கொண்டு இருந்தார். அப்போது India Mart என்ற ஆன்லைன் வர்த்தக தளம் மூலம் தேடியதில், மகாபலிபுரத்தில் பூஞ்சேரி என்ற முகவரியைக் கொண்ட விநாயகா & கோ என்ற பெயரில் இருந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இரண்டு சரக்கு வாகனங்கள் வாடகைக்கு தேவைப்படுவதாகவும், அதற்கு முன்பணமாக 30 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் கார்த்திகேயன் செலுத்தியதாகவும் தெரிகிறது.

imageimage

இந்தநிலையில் பணம் செலுத்தியபின் கார்த்திகேயனின் தொலைபேசி அழைப்பை சம்பந்தப்பட்ட நபர் துண்டித்து உள்ளார். இதனையடுத்து கார்த்திகேயன் மேற்கண்ட முகவரியில் நேரில் சென்று பார்த்தபோது அந்த முகவரி போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அடையாறு துணை ஆணையர் விக்ரமனிடம் கடந்த மாதம் 16 ஆம் தேதி புகார் அவர் அளித்தார். அந்த புகாரின் பேரில் அடையாறு சைபர் கிரைம் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்ட கொசபேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை அடையாறு சைபர் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

imageimage

விசாரணையில் இவர் ஐடிஐ படித்து முடித்திருப்பதும் ஏற்கனவே திருவல்லிகேனி பகுதியில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வந்ததும் பின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதை விட்டுவிட்டு போலியான நிறுவனத்தின் பெயரில் ஆன்லைன் மூலம் தொடர்பு கொள்ளும் நபர்களிடம் சரக்கு வாகனங்களை வாடகைக்கு விடுவதாக கூறி முன்பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

image

கைதான ஜெயக்குமார் ரூ. 7 ஆயிரத்தை முன்பணமாக செலுத்தி, தான் தயாரித்து வைத்திருந்த போலி நிறுவனத்தின் விளம்பரத்தை இந்தியா மார்ட்டில் வெளியிட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் இருந்து செல்போன், விசிட்டிங் கார்டுகள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைதான ஜெயக்குமார் வேறு யாரை ஏமாற்றி உள்ளார்? என்பது தொடர்பாகவும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை கிண்டி காவல் நிலைய குற்றபிரிவினர் தற்போது தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Facebook Comments Box
Author: sivapriya