கர்நாடகா: மது குடிக்க வைத்த இளைஞர்கள் – போதையில் அட்டகாசம் செய்த சிறுவர்கள்

கர்நாடகா மாநிலம் மரளிபுரா கிராமத்தில் நடந்த கறிவிருந்து நிகழ்ச்சியில் 7 சிறுவர்களை மதுபானம் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதையில் சிறுவர்கள் அட்டகாசம் செய்த காட்சிகள் சமூகவளைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து போலீஸார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் ராம்நகரா மாவட்டம் கனகாபுரா தாலுக்கா கோடஅள்ளி காவல் சரகத்திற்குட்பட்ட மரளிபுரா கிராமத்தில் கறிவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கறிவிருந்து நிகழ்ச்சியின்போது அந்த கிராமத்தை சேர்ந்த 7 முதல் 10 வயதுள்ள 7 சிறுவர்களுக்கு அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மது வழங்கி குடிக்க வைத்துள்ளனர். சிறுவர்களும் மதுபானங்களை விளையாட்டாக நினைத்து அதிக அளவில் குடித்துள்ளனர்.

இதில் போதை தலைக்கேறிய பின்னர் சிறுவர்களில் சிலர் அப்படியே சாய்ந்தனர். ஒரு சிலர் போதையில் உளறி கொட்டினர். மது நன்றாக உள்ளது இன்னும் மதுபானம் வேண்டும் என சிறுவர்கள் அட்டகாசம் செய்தனர். சிறுவர்கள் போதையில் உளறி கொட்டிய வார்த்தைகள் மற்றும் அட்டகாச செயல்களை வீடியோ எடுத்த இளைஞர்கள் அதனை சமூகவளைத்தளங்களில் பரப்பி உள்ளனர். சமூகவளைத்தளங்களில் பரவிய சிறுவர்களின் போதை காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த கோடஅள்ளி காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து மரளிபுரா கிராமத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் சிறுவர்களுக்கு மதுபானம் வழங்கி குடிக்க வைத்த ஒருவரை போலீஸார் பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இரண்டுபேர் தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Comments Box
Author: sivapriya