அப்பா இருந்திருந்தால் மகிழ்ச்சியடைந்து இருப்பார்” – சேத்தன் சக்காரியா உருக்கம்

தான் இந்திய அணிக்கு தேர்வாகியிருப்பதை அப்பா இருந்திருந்தால் நிச்சயம் மகிழ்ச்சியடைந்து இருப்பார் என்று இளம் வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இளம் வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியா பலரது கவனத்தையும் பெற்றார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சக்காரியா அண்மையில் கொரோனா பாதித்ததன் காரணமாக தன் தந்தையை இழந்தார். இப்போது இலங்கை செல்லும் இந்திய ஒரு கிரிக்கெட் அணிக்கு சக்காரியா தேர்வாகியிருக்கிறார்.

image

இது குறித்து இந்தியன் எஸ்ரபிரஸ் நாளிதழுக்கு பேசிய சக்காரியா “நான் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது அப்பாவின் கனவு. இப்போது அப்பா இருந்திருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பார். கடந்த ஒரு ஆண்டு காலமாக வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்துவிட்டேன். இதுவரை எனக்கு சில மாதங்கள் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்துள்ளது” என்றார்.

மேலும் பேசிய அவர் “ஐபிஎல்லில் விளையாட தேர்வாவதற்கு முன்பு என்னுடைய இளையச் சகோதரரை இழந்தேன். இப்போது என் தந்தையை இழந்துள்ள சூழலில் எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் என் அப்பாவுடன் 7 நாள்கள் மருத்துவமனையில் அவருடன் இருந்தேன். அந்நேரத்தில் அவர் உயிருக்காக போராடிக்கொண்டு இருந்தார். அவரது மரணம் எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை என் தந்தைக்கும் தொடர்ந்து என்னை ஊக்குவிக்கும் என் தாய்க்கும் சமர்பிக்கிறேன்” என்றார் சேத்தன் சக்காரியா.

image

“ஐபிஎல் முடிந்த பின்பு பலரும் என்னைப் பற்றி பேசினார்கள். அதனால் இந்திய அணிக்கு நிச்சயம் வலைப்பயிற்சி பவுலராவேன் என நினைத்தேன். ஆனால் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. இது எனக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது” என்றார் சேத்தன் சக்காரியா.

Facebook Comments Box
Author: sivapriya