‘பே பேக்’ இந்தியா நிறுவனத்தை வாங்கியது ‘பாரத் பே’

லாயல்டி திட்டங்களை நடத்திவரும் ‘பேபேக் இந்தியா’ நிறுவனத்தை ‘பாரத் பே’ நிறுவனம் கையகப்படுத்தி இருக்கிறது. ‘பாரத் பே’ நிறுவனம் வாங்கியுள்ள முதல் நிறுவனம் இதுதான்.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (90%) மற்றும் ஐசிஐசிஐ இன்வெஸ்ட்மென்ட் ஸ்டராஜிக் இன்வெஸ்மெட்ன் பண்ட் (10%) ஆகிய நிறுவனங்கள் ‘பே பேக்’ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. தற்போது 100 சதவீத ‘பே பேக்’ பங்குகளையும் ‘பாரத் பே’ நிறுவனம் வாங்கியுள்ளது. எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 3 கோடி டாலர் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

இணைப்புக்கு பிறகும் ‘பே பேக்’ நிறுவனம் தனியாகவே செயல்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ‘பே பேக்’ பணியாளர்கள் ‘பாரத் பே’ நிறுவனத்தின் பணியாளர்களாக இனி மாறுவர்கள். தவிர, தற்போதைய பிராண்ட் பெயர், வாடிக்கையாளர்கள் மெர்ச்சண்ட் நிறுவனங்கள் என யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

image

‘பே பேக்’ நிறுவனம் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிரெடிட் கார்டுகள் மற்றும் குறிப்பிட்ட நிறுவனங்களில் வாங்கும்போது புள்ளிகள் சேர்த்துக்கொள்ள முடியும். தேவைப்படும் நேரத்தில் இந்தப் புள்ளியை பயன்படுத்தி பொருட்கள் அல்லது இ-வவுச்சர்களை பெற்றுக்கொள்ள முடியும். இதுவரை ஆன்லைன் மூலமே புள்ளிகளுக்கான வவுச்சர் பெற்றுக்கொள்ள முடியும். இந்த இணைப்புக்கு பிறகு ஆப்லைன் கடைகளிலும் கூட வவுச்சரை பயன்படுத்திக் கொள்வதற்கு ஏதுவான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘பே பேக்’ நிறுவனத்துக்கு 10 கோடி வாடிக்கையாளர்கள் இதுவரை இருக்கிறார்கள். ஆண்டுக்கு 2.5 கோடி டாலர் அளவுக்கு வருமானம் ஈட்டும் நிறுவனமாகவும், லாபம் ஈட்டிவரும் நிறுவனமாகவும் இருக்கிறது.

image

‘பாரத் பே’ நிறுவனம் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கான நிதிச் சேவைகள் மற்றும் கடன்களை வழங்கிவருகிறது. இதுவரை 2 லட்சத்துக்கு மேலான வாடிக்கையாளர்களுக்கு சுமார் ரூ.1,600 கோடிக்கும் மேலான கடன்களை வழங்கி இருக்கிறது.

இந்த நிறுவனத்தில் ரிப்பிட் கேபிடல், இன்சைட் பார்னர்ஸ், செக்யோயா கேபிடல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. கடந்த பிப்ரவரியில் ‘பாரத் பே’ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 90 கோடி டாலராக இருந்தது. விரைவில் இந்த நிறுவனம் யுனிகார்ன் (100 கோடி டாலர் மதிப்பு) நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box
Author: sivapriya