மகாராஷ்டிராவில் கனமழை; வெள்ளத்தில் மிதக்கும் மும்பை

மகாராஷ்டிராவில் பெய்துவரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு மும்பை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மகாராஷ்டிராவில் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தலைநகர் மும்பை உட்பட பல்வேறு இடங்களில் இடைவிடாமல் மழை பொழிந்து வருகின்றது. தொடர்மழையால் மும்பை பெருநகரம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மாதுங்கா, சாண்டாகுரூஸ், மாஹிம், அந்தேரி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மழைநீரில் மிதக்கின்றன. இதனால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கார்களும் பேருந்துகளும் நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன.

தொடர்ந்து பெய்த மழையால், வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வெளியேவர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகம் செல்வோர் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற மும்பை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இடைவிடா மழை காரணமாக பல ரயில் நிலையங்களில் தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், ரயில் போக்குவரத்து தடைபட்டது. மழை நீடிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு மீட்புப் படையினருக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

 

Facebook Comments Box
Author: sivapriya