அதிக விலைக்கு விற்கப்படும் முகக்கவசம், சானிடைசர் : ‘புதிய தலைமுறை’ கள ஆய்வில் அம்பலம்

மதுரையில் அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில் முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படாமல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது ‘புதிய தலைமுறை’யின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது கொரோனோ காலம் என்பதால் முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட பொருட்கள் அத்தியாவசியமாக இருந்து வருகிறது. அனைத்து மக்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ள இந்த பொருட்களுக்கான விலையை தமிழக அரசு நியாயமான விலை நிர்ணயம் செய்துள்ளது. தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள விலைக்கே மாஸ்க் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மதுரையில் உள்ள மருந்தகங்களில் அரசு நிர்ணயித்துள்ள விலையில் மாஸ்க் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ‘புதிய தலைமுறை’ கள ஆய்வு மேற்கொண்டது. இதில், மொத்த விற்பனையில் நடைபெறும் ஒரு சில மருந்தகங்களில் மட்டுமே அரசு நிர்ணயித்துள்ள விலையில் முகக்கவசம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும், சில்லறை விற்பனையில் நடைபெறும் அனைத்து மருந்துகளிலும் அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை விட பல மடங்கு அதிக விலைக்கு முகக்கவசம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது.

image

இது குறித்து மருந்தக ஊழியர்களிடம் கேட்டபோது தங்களுக்கு முறையான அறிவிப்பு வரவில்லை எனவும் ஏற்கெனவே அதிக விலைக்கு கொள்முதல் செய்துள்ளதால் அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில் விற்பனை செய்ய இயலாது எனவும் தெரிவிக்கிறார்கள். 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய என்ற N95 மாஸ்க்கிணை 90 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதும் கள ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Author: admin