கொரோனா சிகிச்சை மருந்துகள், மருத்துவப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 44வது கூட்டத்தில் கோவிட் சிகிச்சைக்கான மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான வரி குறைப்பு முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி கொரோனா சிகிச்சையில் பயன்படும் டோசில்ஜுமேப் , கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ஆம்போடெரிசின் பி ஆகிய மருந்துகளுக்கு 5 சதவிகிதமாக இருந்த ஜிஎஸ்டி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

ரத்தத்தை மெலிவூட்டும் ஹெர்பாரின் போன்ற மருந்துகள், ரெம்டெசிவிர் ஆகியவற்றுக்கு தற்போது விதிக்கப்படும் 12 சதவிகித ஜிஎஸ்டி தற்போது 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கொரோனா சிகிச்சைக்காக மத்திய அரசின் சுகாதாரத்துறை பரிந்துரைக்கும் எந்த மருந்தாக இருந்தாலும் அதற்கான ஜிஎஸ்டி 5 சதவிகிதமாக குறைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

image
ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், கான்சென்ட்ரேட்டர்கள், உள்ளிட்டவற்றிருக்கும் ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கண்டறிவதற்கான கருவிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ரத்த பரிசோதனைகள் மீதான ஜிஎஸ்டி வரியும் 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இவை தவிர கொரோனா மேலாண்மையில் பயன்படுத்தப்படும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர், சானிடைசர்கள், உடல் வெப்ப பரிசோதனை கருவிகள், மயானங்களின் பயன்படுத்தப்படும் தகன மேடைகள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரியும் 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்கள் மீதான ஜிஎஸ்டி வரி தற்போதைய 28 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்புகள் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Author: sivapriya