கொரோனா சிகிச்சைக்கு கால்சிகைன் பயன்படுத்துவதற்கான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமான ‘சி.எஸ்.ஐ.ஆர்.’ மற்றும் ஐதராபாத்தின் ‘லக்சாய் லைஃப் சயின்சஸ்’ தனியார் நிறுவனத்திற்கு, கோவிட் – 19 நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில், கால்சிகைன் மருந்துக்கான இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனைக்கு இந்திய மருத்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஐதராபாத்தில் இயங்கும் சி.எஸ்.ஐ.ஆர்., இந்திய ரசாயன தொழில்நுட்பக்கழகம் மற்றும் ஜம்முவிலுள்ள சி.எஸ்.ஐ.ஆர் – இந்திய ஒருங்கிணைந்த மருந்துக்கழகம் ஆகியவை இந்த முக்கிய மருத்துவ சோதனையில் இணைந்துள்ளன.

கீழ்வாதம் மற்றும் அழற்சி சார்ந்த பிரச்னைகளை குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் இம்மருந்தின் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு சி.எஸ்.ஐ.ஆர்.ன் தலைமை இயக்குநர் மருத்துவர் சேகர்.சி. மாண்டே, தன் பாராட்டை தெரிவித்துள்ளார்.

image

சி.எஸ்.ஐ.ஆர். தலைமை இயக்குநரகத்தின் ஆலோசகரான மருத்துவர் ராம் வி ஷ்வகர்மா, இதுபற்றி பேசுகையில் “இதயம் சார்ந்த இணை நோய்கள் உள்ள நோயாளிகளுக்கு, பொதுவான மருந்துகளுடன் கால்சிகைன் மருந்தையும் இணைந்து வழங்குவதன் மூலம் அவர்கள் விரைவாக குணமடைவார்கள்” எனக்கூறியிருக்கிறார்.

கோவிட் 19 தொற்று ஏற்பட்டபோதும், அதற்கு பிந்தைய காலக்கட்டத்திலும் இதயம் சார்ந்த பிரச்னைகளால் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதாக பல்வேறு சர்வதேச ஆய்வுகள் தெரிவித்திருப்பதால், புதிய மற்றும் மறுபயன்பாட்டு மருந்துகளை கண்டறிவது, தற்போது அவசியமாகிறது. அந்தவகையில் இந்த புது மருந்து, சோதனைகளில் வெற்றி அடைந்தால், இறப்பு எண்ணிக்கை குறையுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Author: sivapriya