பத்தே நிமிடத்தில் மீந்து போன சாதம் 1 கப் இருந்தால்! மொறுமொறு தோசையும், வித்தியாசமான தேங்காய் சட்னியும் செய்து விடலாமே!

காலையில் எழுந்ததும் அவசரத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா? நேற்று மீந்து போன சாதம் இருந்தால் கூட மொறு மொறுவென்று சூப்பரான தோசை செய்து அசத்தி விடலாம். மீந்து போன சாதத்தை எப்பொழுதும் வீணாக்கக் கூடாது. தண்ணீரை ஊற்றி வைத்து இருந்தாலும் சரி, அப்படியே பிரிட்ஜில் வைத்து இருந்தாலும் சரி இந்த தோசை செய்ய ஒரு கப் மீந்து போன பழைய சாதம் இருந்தால் போதும்! அதனுடன் வித்தியாசமான இந்த தேங்காய் சட்னியும் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இப்பதிவை நோக்கி பயணிப்போம்.

தோசை மாவு செய்ய தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – கால் கப்
பழைய சாதம் – ஒரு கப்
அரிசி மாவு – முக்கால் கப், கோதுமை மாவு – கால் கப்
தயிர் – கால் கப், உப்பு – தேவையான அளவிற்கு.

தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் பத்தை – இரண்டு
பொட்டுக்கடலை – இரண்டு டேபிள்ஸ்பூன்
தோல் உரித்த பூண்டு – ஐந்து
வரமிளகாய் – ஐந்து, புளி – சிறிதளவு.

dosai

சட்னிக்கு தாளிக்க:
கடுகு – கால் டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து

தோசை மாவு செய்முறை விளக்கம்:
தோசை மாவு செய்ய சாதத்தில் தண்ணீரை ஊற்றி இருந்தால் முதலில் அதனை சுத்தமாக தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் வறுத்து தோலுரித்த வேர்க்கடலை கால் கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். வேர்க்கடலையை நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பழைய சாதம், அரிசி மாவு, கோதுமை மாவு, தயிர் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் நீர்க்க கரைத்து விடக்கூடாது. இதில் தேவைக்கு ஏற்ப வேர்கடலை மற்றும் அரிசி மாவை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். கரைத்து வைத்துள்ள இந்த தோசை மாவை புளிக்க விட வேண்டிய அவசியமில்லை. இன்ஸ்டண்டாக சுடச்சுட மொறுமொறுவென்று அப்படியே சுட்டு சாப்பிடலாம்.

தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
மிக்ஸி ஜாரில் அரை கப் அளவிற்கு வெட்டி வைத்த தேங்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை, தோல் உரித்த பூண்டு ஐந்து, வரமிளகாய் 5 சேர்த்து லேசாக கொரகொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்க வேண்டும். தாளிப்பு கரண்டியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகை பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக ஆனதும் கருவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டியது தான். மீந்து போன சாதத்தில் சுவையான தோசையும், வித்யாசமான தேங்காய் சட்னியும் பத்தே நிமிடத்தில் செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

 

Author: admin