‘பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது’ – பாஜக கடும் விமர்சனம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறிய திக்விஜய்சிங்குக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காணொலி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் ஒருவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் உரையாடிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில் திக் விஜய் சிங் கூறும்போது, “காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மறு ஆய்வு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார். திக்விஜய் சிங்கின் உரையாடலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறும்போது, “பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது” என்று தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறும்போது, ”மும்பை தாக்குதல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சதி என்று குற்றம்சாட்டினர். பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்குவதை திக்விஜய் சிங் வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர்” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக பாஜக செயதித்தொடர்பாளர் கணேஷ் கார்னிக் கூறுகையில், ”நமது நாட்டின் பெருமையை சீர்குலைப்பது, உலக அரங்கில் பிரதமரின் கவுரவத்தை பாழாக்குவது தான் காங்கிரசின் நோக்கம். திக்விஜய்சிங் கருத்து மூலம், அக்கட்சி சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால் காங்கிரஸ் தனது பெயரை மாற்றிக்கொள்வது நல்லது” என்று தெரிவித்தார்.

Author: sivapriya