காரைக்கால் டூ நாகப்பட்டினம்: அரசு வாகனத்தில் மதுபானம் கடத்திய இருவர் கைது

நாகை அருகே வேளாண்துறை வாகனத்தில் மதுபானம் கடத்திய ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர். ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான புதுச்சேரி சாராயம், மதுபாட்டில்கள் மற்றும் அரசு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் மாவட்ட எல்லை வழியாக சாராயம் மற்றும் மதுபானங்கள் கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் ஆரோக்கிய டோனிஸ்மேரி தலைமையில் போலீசார் திட்டச்சேரியை அடுத்த நடுக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர்.

image

அப்போது அந்த வாகனத்தில் மது பாட்டில்கள் இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வாகனத்தில் இருந்த பாண்டி சாராயம் 200 பாட்டில்கள், 154 குவாட்டர் மதுபாட்டில்கள், 4 புல் பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அரசு வாகனத்தையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் அரசு பணியில் உள்ள ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பதும், அவரின் நண்பர் அம்பிகாபதியுடன் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு வாகனத்திலேயே மதுபானம் கடத்தி இருப்பது நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author: sivapriya