திருப்புகழ் கதைகள்: தமிழின் ஆசிரியரான முருகப் பெருமான்!

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 55
அறிவழிய மயல்பெருக (திருச்செந்தூர்) திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அகத்திய முனிவர் வரலாறு:

பர்வத வேந்தனுக்கு அவன் செய்த தவத்தின் காரணமாகத் திருமகளாகத் தோன்றி வளர்ந்த உமாதேவியாரைச் சிவபெருமான் திருமணஞ் செய்து கொள்ளும் பொருட்டு, இமயமலையில் எழுந்தருளினார்.

அப்போது திருக்கல்யாணத்தைச் சேவிக்கும் பொருட்டு, அனைத்து உலகில் இருந்தும் அனைவரும் வந்து கூடினர். இதனால் இமயமலை நடுங்கியது. அதனால் பூமியின் வடபால் தாழ, தென்பால் மிக உயர்ந்தது. உடனே தேவர்கள் முதல் அனைவரும் ஏங்கி, `என்ன செய்வது’ என்று துன்புற்று “சிவா சிவா” என்று ஓலமிட்டார்கள்.

சிவபெருமான் அது கண்டு திருமுறுவல் செய்து, அவர்களது குறையை நீக்கத் திருவுளங்கொண்டு, அகத்திய முனிவரை அழைத்தார். பின்னர் அவரை நோக்கி “முனிவரே இங்கே யாவரும் வந்து கூடினமையால், வடபால் தாழத் தென்பால் உயர்ந்துவிட்டது. இதனால், உயிர்கள் மிகவும் வருந்துகின்றன.

ஆதலால் நீ இம்மலையினின்று நீங்கித் தென்னாட்டிற் சென்று பொதியை மலையின்மேல் இருக்கக் கடவாய்; நின்னைத் தவிர இதனைச் செய்ய வல்லவர் வேறு யாருளர்! நீ ஒருவன் பொதியமலை சேர்ந்தால் பூமி சமனாகும்!” என்று பணித்தருளினார். அது கேட்ட அகத்திய முனிவர் அச்சமுற்று, சிவபெருமானே நான் என்ன குற்றம் செய்தேன்? உங்களது திருமணக் கோலத்தைக் காணமுடியாதபட் என்னை தெந்திசை அனுப்புகிறீர்களே? எனக் கேட்டார்.

இங்கே திருமாலிருகிறார்; நான்முகன், பிற தேவர்கள் இருக்கிறார்கள்; அவர்களை விட்டுவிட்டு எளியோனை அனுப்புவதன் காரணம் யாது? என்று பணிந்து உரைத்தார். சிவபெருமான், “மாதவ! உனக்கு ஒப்பான முனிவர்கள் உலகத்தில் உண்டோ? இல்லை; பிரமனும் மாலனும் நினக்கு நிகராகார்; ஆதலால் நினைந்தவை யாவையும், நீ தவறின்றி முடிக்கவல்லவன்; இவ்வரிய செய்கை மற்றைத் தேவர்களாலேனும் முனிவர்களாலேனும் முடியுமா? யாவரினும் மேலாகிய உன்னாலே மாத்திரம் முடியும்; செல்லக் கடவாய்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

அகத்திய முனிவர், “எமது பரம பிதாவே! தங்களுடைய திருமணக் கோலத்தை வணங்காது பிரிவாற்றாமையால் என் மனம் மிகக் கவல்கின்றது” என்ன, கயிலாயபதி, “குறுமுனிவ! நீ கவலையின்றி பொதியமலை செல்லுதி; நாம் அங்கு வந்து நமது கல்யாணக் கோலத்தைக் காட்டுவோம்; நீ மகிழ்ந்து தரிசிக்கக் கடவை; நீ நம்மைத் தியானித்துக் கொண்டு அங்கு சில நாள் தங்கியிருந்து, பின்பு முன்போல் நமது பக்கத்தில் வருவாயாக” என்று அருளிச்செய்தார்.

agasthyar
agasthyar

[இந்த இடத்தில் அறிவியல் படித்தோருக்கு இந்தச் செய்தி விநோதமாகத் தோன்றலாம். உலகம் ஆரஞ்சு பழ வடிவில் மேலும் கீழும் தட்டையான கோள வடிவானது. அதிலே வடபகுதி எப்படி உய்ரமுடியும்? தென்பகுதி எப்படி தாழ முடியும் என மயக்கமடையலாம். அவர்களுக்கு ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தக் கோள வடிவ உலகில் ஏராளமான கண்டத்திட்டுக்கள் உள்ளன. அதில் இந்தியக் கண்டத் தட்டும் ஒன்று. இந்த தட்டு இமயமலைப் பகுதியில் உயர்வதும் அதனால் அங்கே நிலம் அதிர்வதும் வழக்கமானதே. அவ்வகையான ஒரு நிகழ்ச்சி அன்று நிகழ்ந்திருக்கலாம்.]

அகத்திய முனிவர் அதற்கியைந்து, அரனாரை வணங்கி விடைபெற்று, பெருமூச்செறிந்து அரிதில் நீங்கி, தென்திசையை நோக்கிச்சென்று பொதிய மலையை யடைந்து, சிவமூர்த்தியைத் தியானித்துக்கொண்டு அப்பொதிய மலையில் எழுந்தருளியிருந்தார். பூமியும் சமமாயிற்று. ஆன்மாக்கள் துன்பம் நீங்கி இன்பமுற்றன.

மாலயனாதி வானவராலும் முனிவர்களாலும் செய்தற்கரிய அரிய செயலைச் செய்ததனால் இங்கே நம் அருணகிரியார் “சிவனை நிகர் பொதியவரை முனிவன்” என்று ஓதியருளினார். வடபாகத்தில் கைலாயமலையில் சிவபெருமான் எழுந்தருளி யிருப்பதுபோல் தென்பாகத்தில் அகத்திய முனிவர் எழுந்தருளியிருப்பதால் “பொதியவரை முனிவன்” என்ற குறிப்பும் உணர்தற்கு இடமாய் அமைத்துள்ளனர்.

இதே திருப்புகழில் இனிய தமிழ் பகர்வோனே என்று அருணகிரியார் குறிப்பிடுகிறார். அகத்தியருக்கு முருகப்பெருமான் இனிய தமிழ் மொழியையும், அதன் இலக்கணத்தையும் உபதேசித்தருளினார்.

இதனால் தமிழ்மொழி ஏனைய மொழிகளினும் உயர்ந்த மொழியென்பதும், அதன் ஆசிரியர் முருகப்பெருமானே என்பதும், அதனை உலகிற்கு உபகரித்த சந்தனாசாரியார் அகத்தியர் என்பதும் நன்கு புலனாகின்றன.

Author: admin