மண்டைக்காடு பகவதி கோவிலில் தேவபிரசன்னம்! ஜோதிடர், போற்றிகள் தேர்வு!

mandaikadu
mandaikadu

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கும் ஜோதிடர்-போற்றிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணிகள் பத்மநாபபுரம் சப் – கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மேற்பார்வையில் முழு வீச்சில் நடந்து வருகிறது. தற்காலிக கூரை அமைக்கும் பணி இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவு பெறும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அடுத்த வாரம் தேவ பிரசன்னம் பார்ப்பதற்கு குமரி மாவட்ட கோவில்கள் நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது.

அதைத்தொடர்ந்து தேவ பிரசன்னம் பார்ப்பதற்கு 10 கேரள தந்திரிகளை கோவில் நிர்வாகம் அழைத்தது. இதில் 5 பேர் ஜோதிடர்கள் மற்ற 5 பேர் போற்றிகள் ஆவர்.

இந்த 10 பேர்களின் பெயர்கள் வெள்ளிக்கிழமை அம்மன் சன்னதி முன்பு வெள்ளித்தட்டில் எழுதி குலுக்கி போடப்பட்டது. மண்டைக்காட்டை சேர்ந்த சிறுமி கனீஷா (வயது 7) அந்த சீட்டுகளை எடுத்து தேவ பிரசன்னம் பார்க்கும் ஜோதிடர், போற்றிகளை தேர்வு செய்தார்.

இதன்படி ஜோதிடராக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த கமலாசனன் நாயரும், அவருக்கு உதவியாக திருவனந்தபுரம் குன்னத்துக்காலை சேர்ந்த அகில் போற்றி, உதயங்குளம்கரையை சேர்ந்த பிரஜேஸ் போற்றி ஆகிய 3 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த 3 பேருமே தேவ பிரசன்னம் பார்ப்பார்கள். தேவ பிரசன்னம் நாளை (திங்கட்கிழமை) பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது என கோவில் வட்டாரம் தெரிவித்துள்ளது. தேவபிரசன்னம் பார்த்து எடுக்கும் முடிவின் அடிப்படையில் பரிகார பூஜைகள் நடைபெறும்.

தீ விபத்திற்கு பின் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கப்படவுள்ளதை தொடர்ந்து பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குலுக்கல் முறையில் தேவபிரசன்னம் பார்க்க ஜோதிடர் மற்றும் போற்றிகள் தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம், தேவசம் உதவி ஆணையர் ரத்னவேல் பாண்டியன், கண்காணிப்பாளர் செந்தில்குமார், மராமத்து பொறியாளர் அய்யப்பன், கோவில் மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் மாவட்ட இந்து கோவில்களின் கூட்டமைப்பு, இந்து முன்னணி, ஹைந்தவ சேவா சங்கம், தேவி சேவா சங்கம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

Author: admin