காளியம்மன் கோவிலில் புதிதாய் முளைத்த ஐம்பொன் சிலையால் பூசாரி அதிர்ச்சி!

nakathamman
nakathamman

கோவில்களில் இருந்து சிலை திருட்டுபோகும் செய்திகளை மட்டுமே கேள்விப்பட்ட நமக்கு, தற்பொழுது கோவிலுக்குள் புதியதாக ஒரு ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவமானது, பொதுமக்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இடையே பெரும் ஆச்சரியத்தையும் , வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது .

வேலூர் மாவட்டம் , குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி அருகே சுமார் 600 அடி உயரமுள்ள சாமியார்மலை என்னும் மலை உள்ளது . இந்த மலையின் உச்சியில் வெங்கடேச பெருமாள் கோவில் மற்றும் முருகர் கோவில் உள்ளது.

சற்று பழமை வாய்ந்த இந்த இரண்டு கோவில்களுக்கு அருகே கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் பக்தர்கள் ஒரு காளியம்மன் சிலை நிறுவி அதற்கு பூஜை செய்து வருகின்றனர்

இதனிடையே , கடந்த 4-ஆம் தேதி முருகர் கோவிலில் இருந்து திருமணங்கள் நடைபெற்றது பின்பு மாலை, கோவிலை சுத்தம் செய்வதற்காக சென்றபோது கோவில் அர்ச்சகர் காளியம்மன் சிலை அருகே ஐம்பொன்னாலான நாகம்மன் சிலை ஒன்றை பார்த்துள்ளார். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வைத்துவிட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அர்ச்சகர் கொடுத்த தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த ஊர் பெரியவர்கள், உடனடியாக இந்த தகவலை குடியாத்தம் வருவாய் துறையினருக்கு தெரிவித்தனர் .

இதனை அடுத்து குடியாத்தம் தாசில்தார் வச்சலா உத்தரவின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் ஜீவரத்தினம் உள்ளிட்ட வருவாய் துறையினர் மலை மேலே உள்ள கோவிலுக்குச் சென்று அங்கிருந்த சுமார் 10 கிலோ எடையும் ஒன்றரை அடி உயரமும் உள்ள ஐம்பொன்னாலான அம்மன் சிலையை குடியாத்தம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்து பின்னர் அந்த அம்மன் சிலையை குடியாத்தம் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர் .

இந்த ஐம்பொன் சிலையை வைத்துவிட்டுச் சென்ற மர்ம நபர்கள் யார், ஒரு வேலை இது வேண்டுதலுக்காக எடுத்துவந்து வைக்கப்பட்டதா , உள்ளிட்ட கோணங்களில் வருவாய் துறையினரும் , குடியாத்தம் போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் கொரோனா ஊரடங்கு காலமென்பதால் பொதுமக்களுக்கு யாருக்கும் வெளியில் தெரியாதவாறு வருவாய்த்துறையினர் சிலையை மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்த நிலையில் . ஒருவாரம் கழித்து ஐம்பொன்னாலான அம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்ட செய்தி குறித்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Author: admin