துளிர்க்கும் நம்பிக்கை: 20 ஏழைக் குடும்பங்களுக்கு உதவிய நெல்லை மணமக்கள்

ஊரடங்கு என்பதால் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திருமணத்தை எளிமையாக வீட்டில் நடத்தி முடித்த மணமக்கள், ‘புதிய தலைமுறை’யின் ‘துளிர்க்கும் நம்பிக்கை’ வாயிலாக 20 குடும்பங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களை வழங்கி உதவினர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வசித்து வருபவர் சோமசுந்தரம், ராஜலட்சுமி தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த வருடம் கொரோனா முதல் அலையும்போது தன் மகளுக்கு எளிமையான முறையில் திருமணம் முடித்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையில் இன்று தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

image

மகனுக்காக மிகப்பெரிய அளவில் திருமணம் செய்ய முடிவு செய்தவர், தற்போதைய கொரனோ பெருந்தொற்றுப் பரவல் காரணமாக அதிக உறவினர்களை அழைக்க முடியாது என்பதால், குறைந்தபட்ச உறவினர்களைக் கொண்டு மிக எளிமையாக வீட்டிலேயே திருமணத்தை நடத்திவைத்தனர்.

இந்த நிலையில், ‘புதிய தலைமுறை’யின் ‘துளிர்க்கும் நம்பிக்கை’ வாயிலாக இந்தப் பெருந்தொற்று காலத்தில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் மணமக்கள் முத்தையா மற்றும் லாவண்யா இருவரும் இணைந்து 20 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு மளிகை பொருட்களை வாங்கிக் கொடுத்தனர். இதனை ‘துளிர்க்கும் நம்பிக்கை’ வாயிலாக உதவி தேவைப்படும் மக்களுக்கு நேரில் சென்று வழங்கிவரும் ஃபேஸ்புக் நண்பர்கள் குழு உறுப்பினர்களிடம் மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்படைத்தனர்.

image

திருமண நாளன்று அறுசுவை உணவு சமைத்து 1000-க்கும் மேற்பட்டோருக்கு விருந்து அளிப்பது வழக்கம். ஆனால் பெருந்தொற்று காலத்தில் உணவுக்காக போராடும் ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை வழங்குவது பாராட்டுக்குரியது மட்டுமின்றி உதவும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு முன்மாதிரியான உதாரணம்.

– புதிய தலைமுறையின் ‘துளிர்க்கும் நம்பிக்கை’ உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

Author: sivapriya