காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எரிபொருள் வரியை குறையுங்கள் ராகுல் -தர்மேந்திர பிரதான்

எரிபொருள் விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி கவலைப்பட்டால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் அரசுகளிடம் பெட்ரோல், டீசல் மீது விதிக்கும் வரியைக் குறைக்கச் சொல்ல வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
 
பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-யைக் கடந்துள்ளது. ராஜஸ்தானில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100-யைக் கடந்துள்ளது.
 
image
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘’எரிபொருள் விலை உயர்வு காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்கிறேன். பெட்ரோல், டீசல் மீதான விலை உயா்வு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடா்ந்து கேள்வி எழுப்பி வருகிறார். இதற்காக மத்திய அரசு மீது அவா் குற்றஞ்சாட்டி வருகிறார். அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகியவற்றில் பெட்ரோல், டீசல் விலை ஏன் அதிகமாக உள்ளது?
 
எரிபொருள் விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி கவலைப்பட்டால், எரிபொருள் மீதான வரியைக் குறைக்குமாறு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை ராகுல் வலியுறுத்த வேண்டும். வரிகளை குறைக்குமாறு உத்தவ் தாக்கரேவிடம் சொல்ல வேண்டும்‘’ என்றார்.

 

Author: sivapriya