சென்னை: பயிற்சி என்ற பெயரில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்; ஜிம் பயிற்சியாளர் மீது புகார்

ஊரடங்கை மீறி ரகசியமாக திறக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்திற்கு வந்த இளம்பெண்ணிடம் பயிற்சியாளர் அத்துமீறலில் ஈடுபட்டதாக சென்னை பரங்கிமலை காவல்துறை துணை ஆணையரிடம் ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தை அடுத்துள்ள கேம்ப் ரோட்டில் இயங்கிவரும் உடற்பயிற்சிக் கூடத்தின் பின்புற வாயிலை திறந்து உடற்பயிற்சி மேற்கொள்ள அனுமதித்து வந்துள்ளனர். கடந்த வாரத்தில் ஒருநாள், உடற்பயிற்சியில் ஈடுபட்ட அனைவரும் கிளம்பிச் சென்றுவிட்ட நிலையில், பயிற்சியாளர் பிரேம் ஆனந்த் என்பவர், இளம்பெண் ஒருவரை மட்டும் சிறப்பு பயிற்சி இருப்பதாகக்கூறி அங்கேயே இருக்கச் சொல்லி உள்ளார்.

பின்னர் அந்தப்பெண்ணிடம் அவர் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த அந்தப்பெண் அவரிடமிருந்து தப்பி வந்துவிட்டார். இச்சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்தப்பெண், தனது மனக்குமுறலை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். தனக்கு நேர்ந்தது போன்று வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஃபேஸ்புக்கில் பதிவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனைப் பார்த்த பயிற்சியாளர் பிரேம் ஆனந்த், அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு சமாதானம் செய்ய முயன்றதாகத் தெரிகிறது. இந்த சூழலில், பயிற்சியாளர் பிரேம் ஆனந்த் மீது பாதிக்கப்பட்ட பெண் பரங்கிமலை காவல் துணை ஆணையரிடம் ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.

Author: sivapriya