ஆட்சியர்கள், டீன்களின் அறிவுரையின்படி தரமான உணவளித்தோம்: விஜயபாஸ்கர் விளக்கம்

கொரோனா முதல் அலையின்போது மருத்துவக்குழுவினரின் பரிந்துரையின் பேரிலேயே நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க தரமான உணவு வழங்கப்பட்டதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ”தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் மாவட்டம்தோறும் கொரோனாவுக்கு பிந்தைய மறு சிகிச்சை மையங்களை அரசு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் கருப்பு பூஞ்சை, நுரையீரல், நீரிழிவு, இருதயம் சம்பந்தப்பட்ட பாதிப்பிலிருந்து தப்ப முடியும். இதனை உடனடியாக அரசு செய்ய வேண்டும்.
தற்போது கொரோனாவின் பாதிப்பு குறைந்தாலும் இறப்பு எண்ணிக்கை குறையவில்லை. அதனையும் குறைக்க அரசு நடவடிக்கை எடுப்பதோடு உயர்நீதிமன்றத்தின் அறிவுரைப்படி இறப்பு எண்ணிக்கை, வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும். கடந்த ஆண்டின்போது கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவக் குழுவினரின் பரிந்துரைப்படி ஊட்டச்சத்துக்கள்மிக்க உணவு வழங்கப்பட்டது. இதில் நோயாளிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கண்காணிப்பில், அரசு நிர்ணயம் செய்த விலைக்கு உட்பட்டு சிறந்த முறையில் உணவு வழங்கப்பட்டது. அப்போது இருந்த சூழலில் நிர்ணயிக்கப்பட்ட விலையை இந்த ஆண்டோடு ஒப்பிடக்கூடாது” என்று கூறினார்.

Author: sivapriya