மக்களின் அதிகாரி, களப்பணியில் அதிரடி… வேலூர் ‘மிஸ்’ செய்யும் ஆட்சியர் சண்முகசுந்தரம்!

பணியிட மாறுதல் வருவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு, புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தில் மக்களுக்காக நேரலையில் கொரோனா பேரிடர் கால விழிப்புணர்வூட்டினார் வேலூர் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகித்த சண்முகசுந்தரம். கொரோனா, நிவர் புயல் போன்ற பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றியவர்; ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் கடைசி ஆட்சியர்; மாவட்ட பிரிப்புக்கு பின் முதல் ஆட்சியர் என பல சிறப்புகளுக்கு உரியவர்.

திருக்கோவிலும் கரடி கிராமத்தை சேர்ந்தவர் ஆட்சியர் சண்முக சுந்தரம், 2011-ல் இந்திய ஆட்சிப் பணி அந்தஸ்தை பெற்றவர். பல துறைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். சென்னை ஆட்சியராக இருந்த இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். அப்போது இவருக்கு முதல் சாவாலாக அமைந்தது ரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தேர்தல். அத்தனை களேபரங்களுக்கு மத்தியில் புதிய மாவட்டத்தில் எந்தவித சமரசமும் இன்றி பல்வேறு புதிய முயற்சிகளோடு நாடாளுமன்ற தேர்தலை நடத்தி முடித்தார்.

image

இந்த தேர்தல் அலை ஓய்வதற்குள்ளாகவே மிகப் பெரிய பொறுப்பாக இவர் மீது வந்தது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் என 3 ஆக பிரிப்பது. அதிலும் திறம்பட செயல்பட்டு 2019 ஆகஸ்ட்டில் ஒருங்கிணைந்த மாவட்டத்தை 3 ஆக பிரிக்கும் பணியாற்றினார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் கடைசி ஆட்சியரும், பிரிக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியரும் இவரே ஆவார்.

இதனையடுத்து மக்கள் குறைகளை தீர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். குறிப்பாக பசுமைக் காப்பதிலும், விவசாயத்துக்கும் முன்னுரிமை அளிப்பதை முதன்மையானதாக கொண்டிருந்தார். இதற்காக SAVE PALARU என்ற பெறும் திட்டத்தை தொடங்கி பாலாற்றின் கரைகளில் 6 லட்சம் மரக்கன்று நடும் பணியையும் துவக்கிவைத்தார். குடிமராமத்து பணியையும் சிறப்பாக செய்தவர்.

வரலாற்றில் இல்லாத வகையில் முதல் முறையாக வேலூர் மாவட்டத்தை 2020-ல் “நிவர் புயல்” தாக்கியபோது முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதிப்பை முழுவதுமாக குறைத்தார். புயல் ஓயத் துவங்கும் முன் அதிகாரிகளோடு களத்திற்குச் சென்றவர். அதோடு இல்லாமல் நள்ளிரவிலும் நேரடி ஆய்வு, மீட்புப் பணியை செய்து மக்களின் பாராட்டை பெற்றவர்.

image

அணைகட்டு தொகுதியில் உள்ள மலை கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுத்தவர். அம்மக்களுக்கு சாதி சான்றிதழ், மலை வாழ் மக்கள் அடையாள அட்டைகளை வழங்க சிறப்பு முகாம் நடத்தி 14 ஆயிரம் பேருக்கு சான்று வழங்கி மலை கிராம மக்களின் பாசத்தை பெற்றவர். அவர்களின் கனவான அல்லேரி, பீஞ்சமந்தை, குருமலை – மலை கிராம சாலைகளை அமைக்க காரணமானவர்.

கொரோனா பரவலின் முதல் அலையின் ஊரடங்கின்போது குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடப்பதை அறிந்து, அதனை தடுக்க சிறப்பு குழு அமைத்து சுமார் 35 திருமணத்தை தடுத்து நிறுத்தியவர்.

image

கொரோனா முதல் அலையில் நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட சமயத்தில், துரிதமாக செயல்பட்டு இந்தியாவிலேயே முதன்முறையாக வேலூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள், மருத்துவத்துக்கு வந்தவர்களை அரசு செலவில் ரயில் மூலம் சொந்த ஊர் அனுப்பி வைத்த தாயுள்ளம் கொண்டவர். சாலையோரம் பசித்தவர்களுக்கு தொடர் உணவு கொடுத்தவர்.

எப்போதும் பம்பரமாய் சூழற்று பணியாற்றியவர் கொரோனா பேரிடரிலும் சளைக்காமல் களப்பணியாற்றியவர். இவருக்கும் கடந்த 16.05.2021 அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர். அதே வேகத்தோடு தற்போது வரை களத்தில் சுழன்று வருகிறார். தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்தபோதும் தொடர் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளார். படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, தடுப்பூசி தேவை என எல்லா தரப்பிலும் கவனம் செலுத்தியவர்.

image

தமிழக அளவில் RTPCR பரிசோதனையை அதிகமாக செய்த முதல் மாவட்டம் வேலூர் என்ற பெருமையை தேடி தந்தவர். சக ஊழியர்களை சமமாக நடத்தக் கூடியவர். மக்கள் எளிதில் அணுகும் நிலையில் இருந்தவர். மாவட்டத்தில் பல பகுதிகளில் சமூக காடு வளர்ப்பு திட்டம், மியாவாக்கி காடு வளர்ப்பு திட்டத்தை ஊக்குவித்தவர். இப்படி எண்ணிலடங்க செயல்களை செய்தவர் பணியிட மாறுதலில் செல்வது வேலூர் மாவட்ட மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கூட்டுறவு துறைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள இவர், புதிய தலைமுறை டிஜிட்டல் ஃபேஸ்புக் பக்கத்தின் நேரலையில் கலந்துகொண்டு சுமார் ஒரு மணி நேரமாக கொரோனா குறித்த விழிப்புணர்வை வழங்கினார். குறிப்பாக கொரோனா தடுப்பில் இதுவரை வேலூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள், இனி செய்ய இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 3-வது அலையை எதிர்கொள்ள மக்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள், குழந்தைகளை பாதிக்குமா? குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். தடுப்பூசியின் அவசியம் என பல்வேறு விளக்கங்களை விரிவாக வழங்கினார்.

அந்த நேரலை வீடியோ பதிவு இதோ…

Author: admin