”தனுஷ் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர்” – சந்தோஷ் நாராயணன்

‘ஜகமே தந்திரம்’ படத்திற்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ”தனுஷ் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர்” என்று பாராட்டியிருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ’ஜகமே தந்திரம்’ படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஜூன் 18-ஆம் தேதி வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் ‘ரகிட ரகிட’, ‘புஜ்ஜி’, ’நேத்து’ ‘ஆல ஓல’, ’தீங்கு தாக்கா’ என அனைத்து பாடல்களும் படம் வெளியாவதற்கு முன்பே சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் தனுஷ் பாடல்கள் எழுதியதோடு பாடியது குறித்தும் சந்தோஷ் நாரயணன் தனுஷை பாராட்டி இருக்கிறார்.

image

”நான் எப்போதும் தனுஷிடம் நீங்கள் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருத்தர் என கூறுவேன். அதிலும் மிகச்சிறந்தவர்களில் முதன்மையானவர் என்றே சொல்வேன். அவர் ஒரே நேரத்தில் முற்றிலும் வித்தியாசமான படங்களை செய்கிறார். அவர் எழுதவும் செய்கிறார். ரௌடி பேபி போன்ற பாடல்களை படைக்கிறார். தற்போதைய காலக்கட்டத்தில், இன்றைய தலைமுறையினர் என்ன விரும்புகிறார்கள் என்பது அவருக்கு அத்துபடியாக தெரிந்திருக்கிறது. இப்படத்தின் பாடல்களை அவருக்கு அனுப்புவேன். பல வெற்றிகளை தந்திருந்தாலும் இப்படத்திற்கு எது தேவையோ அதை சரியாக சொல்வார். இப்படத்தின் இசைக்கு அவர் தான் வழிகாட்டி, ஆனால், அதை அவர் கண்டிப்பாக மறுப்பார். ஆனாலும் அவர் தான் இப்படத்தின் இசைக்கு உந்துதல்” என்று பாராட்டியுள்ளார். ஏற்கனவே, தனுஷ் – சந்தோஷ் நாரயணனனின் ‘கர்ணன்’ பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Author: sivapriya