சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாமாண்டு நினைவுதினம்: பிரார்த்தனை செய்த முன்னாள் காதலி

இன்று நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது முன்னாள் காதலி அங்கிதா, அவருடன் இருக்கும் புகைப்படங்களையும் நடனமாடும் வீடியோவையும் பகிர்ந்து நினைவுகூர்ந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார் சுஷாந்த் சிங் ராஜ்புத். எவ்வித பின்புலமும் இல்லாமல் சீரியல் நடிகராக அறிமுகமாகி சினிமாவிலும் சாதித்ததற்காகவே சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அடுத்தடுத்து அவர் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் படங்கள். இந்நிலையில்தான், கடந்த ஜுன் 14-ஆம் தேதி தனது மும்பை பாந்த்ரா வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவையே உலுக்கிய சுஷாந்த் மரணம் தொடர்பாக இன்னும் விராசணை போய்க்கொண்டிருக்கிறது.

image

இந்நிலையில், இன்று சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது ரசிகர்கள் உருக்கமுடன் சுஷாந்த்தை நினைவுகூர்ந்து வரும் நிலையில், சுஷாந்த்தின் முன்னாள் காதலி அங்கிதாவும் சுஷாந்த்துடன் நடனமாடும் வீடியோவையும் அவருடன் இருக்கும் மகிழ்ச்சியான தருண புகைப்படங்களையும் வெளியிட்டதோடு பிராத்தனை செய்யும் வீடியோவையும் பதிவிட்டு நினைவு கூர்ந்துள்ளார். தமிழில் சூப்பர் ஹிட் அடித்த ’மெட்டி ஒலி’ சீரியல் இந்தியில் ’பவித்ர ரஷ்தா’ ரீமேக்கானபோது அதில், சுஷாந்த்தும் அங்கிதாவும் ஹீரோ ஹீரோயினாக நடித்தார்கள். அப்போது, இருவருக்கும் காதல் மலர்ந்து பின்பு பிரிந்துவிட்டார்கள். ஆனாலும், சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதிலிருந்து அவரது மரணத்திற்கும், அவரது குடும்பத்திற்கும் நீதிகேட்டு வருகிறார் அங்கிதா.

image

பாலிவுட்டின் அடுத்த ஷாருக்கான் எனப் புகழப்பட்ட சுஷாந்தின் திரைப் பயணத்தைச் சற்றே திரும்பிப் பார்ப்போம். சுஷாந்த் பீகார் மாநிலம் பாட்னாவில் 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி பிறந்தார். சின்னத்திரை தொடர்கள் மூலம் நடிப்புலகில் அறிமுகமான இவர் ‘தேஷ் மேன் ஹாய் மேரா தில்’ என்ற தொடரில் முதன் முதலில் நடித்தார். பின் 2009- ஆம் ஆண்டு பவித்ர ரிஷ்தா என்ற தொடரின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

2013-ஆம் ஆண்டு, எழுத்தாளர் சேத்தன் பகத் எழுதிய ‘த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் ‘( 3 mistakes of my life) என்ற புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘கை போ சே’ (Kai Po Che) மூலம் நாயகனாகப் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து ‘ஷுத் தேஸி ரொமான்ஸ்’, ‘டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி’ ஆகிய படங்கள் மூலம் பாலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவராகக் குறுகிய காலத்தில் வளர்ந்தார். ஆமிர்கானின் ‘பிகே’ படத்திலும் துணை கதாபாத்திரத்தில் அனுஷ்கா சர்மாவின் காதலனாக நடித்திருந்தார். அவர் வாழ்வின் முக்கியத் திருப்புமுனையாக 2016 ஆம் ஆண்டு அமைந்தது. இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லும் விதமாக உருவாக்கப்பட்ட ‘எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி’ (MS Dhoni: The Untold Story) திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி நாடு முழுவதும் பிரபலமடையச் செய்தது. உயிருடன் இருக்கும்போது கடைசியாக இவர் நடித்து திரையரங்கில் வெளியான திரைப்படம் ‘சிச்சோரே’ (2019). இந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Author: sivapriya