அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது… ஆள்வோரின் அரசியல் உள்நோக்கம்!

hrnce office e1561694728558
* நடராஜ சாஸ்திரி | Nataraja Sastry

இப்போது ஆலயங்களில் அனைவரும் அர்ச்சகர் ஆவது பற்றி அதி முக்கியமாக விவாதம் நடத்தப்படுகிறது. கொரானாவால் தமிழகமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கிய கவனம் செலுத்தாமல் இப்போது இந்த பிரச்சனையை கையில் எடுத்து கொண்டிருக்கிறார்கள். முதலில் ஒரு பள்ளி, பிறகு ஜக்கி வாசுதேவ் இப்போது ஆலயங்கள் பற்றி!

பரவாயில்லை இதற்கு நாம் நம்முடைய கருத்தை பதிவு செய்வோம். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் கிட்டத்தட்ட 25 சதவீதம் பிராமணர்கள்தான் பூஜை செய்கிறார்கள்… மற்ற கோயில்களில் பூஜாரிகள் மற்றும் பிராமணர் அல்லாத பல்வேறு சாதியினர் பூஜை செய்யும் கோவில்கள் தான் அதிகம் உள்ளன.

அதுவும் அரசியல்வாதிகளால் உயர்ஜாதி என்று கருதப்படும் ஜாதிகளின் குல தெய்வங்கள் கிட்டத்தட்ட 90 சதவிகிதம், அரசியல்வாதிகளால் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று அழைக்கப்படுகின்ற மக்கள் பூஜை செய்யும் ஆலயங்கள்தான்! அதாவது நாவிதர், சலவையாளர், குயவர் போன்றோர்தான். வருடத்துக்கு ஒருமுறை உயர் ஜாதியினர் என்று அரசியல்வாதிகளால் சுட்டிக் காட்டப் படுபவர்கள், அந்தக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்து அங்கு பூஜை செய்பவருக்கு மரியாதை செய்து அவர் கையால் பிரசாதங்கள் வாங்கி வருவது காலங்காலமாக நடைபெறும் வழக்கம்.

எங்களுக்கு, திருத்தணி பக்கத்தில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். அந்தக் கோவிலில் இன்றும் நாங்கள் குடும்பத்துடன் போய் பூஜை செய்து அங்கு பூஜை செய்பவருக்கு மரியாதை செய்து வருவது வழக்கம். எந்தப் பிரிவினரையும் சமூகத்தில் ஒதுக்கி வைப்பது கிடையாது. ஆலய பிரவேசம் நடப்பதற்கு முன்பாகவே 63 நாயன்மார்களையும் கோயிலுக்கு உள்ளே வைத்து வழிபட்டவர்கள் நாங்கள்.

நடுவில், ஆன்மிக உணர்வு நலிந்து போய், போர்களாலும், ஆள்பவர்களாலும் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, அதன் மூலம் கடைப்பிடிக்கப் பட்ட தீண்டாமைக் கொடுமைகள், ஆன்மீக ரீதியாக முன்னர் ஒன்றிணைந்து கிடந்த சமூகங்களைப் பிரித்து விட்டது.

தேசவிரோதிகள் மற்றும் ஹிந்து மத விரோதிகள் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி இன்றும் பிரிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்களின் கனவு எப்போதும் பலிக்காது. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் இப்போது நினைவுக்கு வருகிறது.

பல கோவில்கள் பராமரிப்பு இல்லாமல் பாழ்பட்டு கிடக்கின்றன. ஆகம பிரமாணம் இல்லாமல் இருக்கும் கோயில்களை ஹிந்து அறநிலையத்துறை கையில் எடுத்து சீர்படுத்தி அனைத்து சாதியினரையும் அந்தக் கோவில்களில் பணிபுரிய அமர்த்தலாம். அதில் யாருக்கும் எந்த மறுதலிப்பும் எதிர்ப்பும் இருக்காது.

ஆனால், ஹிந்து மதத்தை அழிக்க நினைப்பவர்கள் கோரிக்கை உள் நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது. அவர்களது உண்மையான நோக்கம் பிராமணர்கள் பூஜை செய்யும் கோயில்களில் மட்டும்தான் அவர்களை நியமித்து பிராமண வெறுப்பை 24 மணி நேரமும் காட்டுவது. உண்மையான அக்கறை இருக்குமானால் அவர்கள் உடனடியாக பாழடைந்த கோயில்களில் அரசாங்க செலவில் சரிப்படுத்தி அவர்களே அங்கு பணியில் அமர்த்தலாம்.

ஒன்றாக இருக்கும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க முயற்சிக்காதீர்கள். தமிழக அரசு இந்த மாதிரி ஹிந்து மத வெறுப்பாளர்கள் குரலுக்கு செவி சாய்க்காமல் பாழடைந்த கோயில்களை சீரமைத்து அவர்களுக்கு பணி கொடுங்கள்.

அரசியல்வாதிகளால் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் என்று சுட்டிக் காட்டப்படும் பூஜாரிகள் பூஜை செய்யும் கோவில்களில், இவர்கள் எத்தனை பேர் வழிபாடு செய்திருக்கிறார்கள்? குருகுலக்கல்வியை சிதைத்த கும்பல்களின் அடிவருடிகள்தானே!

எல்லோரும் நன்றாக இருக்க ஸ்ரீ அம்பாளை பிரார்த்தனை செய்கின்றேன்.

Author: admin