குடும்ப கஷ்டத்தால் அரசுப்பள்ளியில் சேர நேர்ந்ததால் அழுதுகொண்டே இருந்த மாணவி

இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை கூடுதலாக 10 லட்சம் மாணவ, மாணவிகள் சேர வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணம் என்ன. விரிவாக பார்க்கலாம்.

தமிழகம் முழுவதும் பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. முதலில் அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பிளஸ் ஒன் சேர்க்கை நடைபெறுகிறது. அதன் பிறகு மற்ற பள்ளிகளில் இருந்து வருவோருக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை முடிந்தபிறகு மற்ற வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பத்தாம்வகுப்பு முடித்தவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அவர்களின் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த கல்வியாண்டு பெற்றோர் அதிக அளவில் அரசுப்பள்ளிகளை நாடி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பலரது வருமானம் தடைப்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களின் பெற்றோர் அரசுப்பள்ளிகளில் அட்மிஷன் கேட்டு விசாரித்த வண்ணம் உள்ளனர்.

சென்னை அசோக் நகரில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த மாணவி ஒருவர், தந்தையின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசுப்பள்ளியில் சேர நேர்ந்ததை அடுத்து, தாயுடன் அழுதுகொண்டே சேர்க்கைக்கு வந்திருந்தார்.

கடந்த கல்வி ஆண்டில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை, அதற்கு முந்தையை இரண்டு கல்வி ஆண்டுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்தது. 2018 – 19ஆம் கல்வி ஆண்டில் 8 ஆயிரம் மாணவர்களும், 2019 – 20ஆம் கல்வி ஆண்டில் 10 ஆயிரம் மாணவர்களும் கூடுதலாக அரசுப்பள்ளியில் சேர்ந்தனர். அதுவே 2020-21ஆம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை வழக்கத்தை காட்டிலும் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளியை தேர்வு செய்தனர். வழக்கமாக 12 லட்சம் மாணவர்கள் சேரும் நிலையில், அது கடந்த கல்வியாண்டு 13 லட்சமாக அதிகரித்தது. அதுவே இந்த ஆண்டு கூடுதலாக 10 லட்சம் மாணவ, மாணவிகள் சேர வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Author: sivapriya